செய்திகள்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்: கனிமொழி எம்பி பேச்சு

Makkal Kural Official

நெல்லை, பிப். 17–

“இந்தியா கூட்டணி வென்றால்தான் இந்தியா வெல்லும்” என்றும் பாஜக வென்றால், இந்த நாட்டின் தோல்வி என, நெல்லையில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.பேசினார்.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ என்னும் தலைப்பில் பாளை பெல் மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் (நெல்லை கிழக்கு) ஆவுடையப்பன், (தென்காசி தெற்கு) ஜெயபாலன், ஞானதிரவியம் எம்பி, அப்துல்வகாப் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் வரவேற்றார். சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சுரேஷ்ராஜன், ஹெலன் டேவிட்சன், வசந்தம் ஜெயக்குமார், சுரேஷ் மனோகரன், சிவராஜ் ஆகியோர் பேசினர்.

தலையாட்டி பொம்மைகளா நாம்?

கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது:–

”மாநில உரிமைகள் மற்றும் அடையாளங்களை அழிப்பதையே ஒன்றிய பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புதிய திட்டங்களுக்கு புரியும் பெயரை வையுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருத மொழிகளில் பெயர்களை வைப்பதே அவர்கள் வேலையாக உள்ளது. பிரதமர் மோடி பல இடங்களில் திருக்குறளை கூறுகிறார். தமிழை பழமையான மொழி என்கிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி வளர்ச்சிக்கு அள்ளி கொடுக்கிறார். நம் தாய்மொழியாம் தமிழ் வளர்ச்சிக்கு கிள்ளி கொடுக்கிறார். தென்மாநிலங்களில் இருக்கும் நாம் அனைவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

ஜிஎஸ்டி பணத்தை நம்மிடம் இருந்து வாங்கி கொண்டு, திரும்ப கொடுப்பதே இல்லை. தமிழ்நாட்டிற்கு 26 பைசா, கேரளாவிற்கு 62 பைசா என நாம் கொடுக்கும் ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு சார்பில் திரும்ப கொடுக்கப்படுகிறது. ஆனால் உத்தரபிரதேசத்திற்கு மட்டும் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரிக்கு, திரும்ப 2 ரூபாய் 2 பைசா கொடுக்கப்படுகிறது. அங்கு மட்டும் ஜிஎஸ்டி தொகை இருமடங்காக திரும்ப அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது.

ஒரு ரூபாய் கூட தரவில்லை

சென்னை வெள்ளத்தில் வியாபாரிகளும், பொதுமக்களும் துன்பங்களை அனுபவித்தனர். நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு இருந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்துவிட்டு சென்றாரே ஒழிய, நிவாரணமாக இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 2018ம் ஆண்டு முதல் இதுவரை பாஜவிற்கு 6,564 கோடி நிதி கிட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த தொகையை மொத்தமாக கூட்டினால் இத்தொகை வராது. தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றது தவறு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, இஸ்லாமியர்களுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராடும் விவசாயிகள் மீது ஒன்றிய அரசு டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ, தொழிலாளர் விரோத சட்டங்கள் என ஒன்றிய அரசு அனைவருக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது.

மக்களை பற்றி, ஒடுக்கப்பட்ட சமூகத்தை பற்றி ஒன்றிய அரசுக்கு அக்கறையே இல்லை. மத அரசியலை முன்னிறுத்தி பாஜக ஆட்சி நடத்துகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை 1.15 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 2.60 லட்சம் பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், அனைத்து மாநிலங்களிலும் இன்று நூறு நாள் வேலைத்திட்டத்தில் பலர் சம்பளம் இல்லாமல் தவிக்கின்றனர். பல கிராமங்களில் வேலையும் வழங்கப்படுவதில்லை. நாட்டின் இறையாண்மையை பாரதீய ஜனதா சிதைத்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். அப்போதுதான் இந்தியா வெல்லும். பாஜவின் வெற்றி நாட்டின் தோல்வியாகும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *