செய்திகள்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

நாக்பூர், டிச. 29–

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்’ என்று, காங்கிரஸ் கட்சியின் 139-ஆவது நிறுவன நாளில் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் 139-வது நிறுவன நாளை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ‘நாங்கள் தயார்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:–

நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைப்பதை காங்கிரஸ் குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனால், பாஜக ஏராளமான மக்களை மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது.

இரண்டு இந்தியாவை காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கூட்டணி மட்டுமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.

பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்

ஓபிசி, தலித், பழங்குடியினர் சமூகத்தினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என தன்னைத் தானே வர்ணித்துக்கொண்டார்.

ஆனால், நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட போது, ‘நாட்டில் ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது. அது ஏழ்மைதான்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அப்படியென்றால், தன்னை ஓபிசி பிரிவைச் சேர்ந்தவராக பிரதமர் குறிப்பிட்டது ஏன்? அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, ‘நாட்டில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாகத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். ‘நாகபுரியில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. அதில் ஒன்று சட்டமேதை அம்பேத்கருடன் தொடர்புடைய நாட்டின் முன்னேற்றத்துக்கானது. மற்றொன்று நாட்டை அழிக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம். சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *