புதுடெல்லி, டிச.7–
‘இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக உள்ளேன்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மம்தா பானர்ஜியை இந்திய கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வருவதால், ஏன் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா பானர்ஜியிடம் ஒப்படைக்கவில்லை?’ என திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதால், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பா.ஜ.க.வுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் செயல்பாடு சரியில்லை என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி இருந்தார்.
மேற்குவங்க மாநில செய்தி சேனலுக்கு மம்தா அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“இந்தியா கூட்டணியை நான் உருவாக்கினேன். தற்போது அதை நிர்வகிப்பது தலைமையில் இருப்பவர்களிடம்தான் உள்ளது. அவர்களால் நடத்த முடியாவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறுவேன்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பா.ஜ.க. எதிர்ப்பை தீவிரமாக கையாளும் நீங்கள் ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘வாய்ப்பு கிடைத்தால், கூட்டணி சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வேன். இருப்பினும் மேற்கு வங்காளத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இங்கிருந்தே கூட்டணியை நடத்த முடியும்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.