செய்திகள்

இந்தியா – குவைத் உறவு மேலும் வலுப்படும்: பிரதமர் மோடி உறுதி

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 21–

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று குவைத் புறப்பட்டு சென்றார்.

‘இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குவைத் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா அழைப்பை ஏற்று பிரதமர் மோடி குவைத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு முக்கியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுகிறார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார். இதற்கு முன்பு 1981ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றார். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6-வது இடத்தில் உள்ளது. குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் குவைத் முதலீடு செய்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமர் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தார். இப்போது குவைத்துக்கும் அவர் சென்றார். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை குவைத் இப்போது வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று பிரதமர் மோடி டெல்லியிலிருந்து குவைத் புறப்பட்டு சென்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘இன்றும் நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *