டெல்லி, செப். 21–
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், கனடா விசா நடைமுறையில் சிக்கல் எழுந்துள்ளதால், விசா நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
கனடாவில் இருந்து இயங்கி வரும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்திய அரசு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம் சாட்டினார். மேலும், இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடாவில் இருந்து வெளியேற்றியது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளதுடன் தனது பங்கிற்கு கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது.
விசா நடைமுறை நிறுத்தம்
இருநாட்டு அரசு உறவில் விரிசல் எழுந்த நிலையில் தற்போது கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான அனைத்து விசா நடவடிக்கையையும் இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து விசா விண்ணப்ப சேவையை வழங்கி வரும் பிஎல்எஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இன்று (செப்டம்பர் 21, 2023) முதல் நடைமுறைக்கு வரும், இந்திய விசா சேவைகள் செயல்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இது தொடரும். புதுப்பிப்புகளுக்கு பிஎல்எஸ் இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்கிறோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.