செய்திகள்

இந்தியா – இலங்கை முதல் ஒரு நாள் கிரிக்கெட்:இன்று துவக்கம்

கொழும்பு, ஜூலை 18–

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல் – -இரவு ஆட்டமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் நடக்கிறது.

ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சென்றுள்ள இந்தியாவின் 2ம் தர கிரிக்கெட் அணி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடுகிறது. இதன்படி இந்தியா -– இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பகல் – -இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

கடந்த 13-ந்தேதி தொடங்க இருந்த இந்த போட்டி இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமாக இன்று தொடங்குகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியில் திறமைக்கு பஞ்சமில்லை. கேப்டன் ஷிகர் தவானுடன் தொடக்க ஆட்டக்காரராக பிரித்வி ஷா இறங்குகிறார். முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தவான் இன்னும் 23 ரன் எடுத்தால் 6 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே வலுசேர்க்கிறார்கள்.

இங்கிலாந்து தொடரின் போது கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி ஒழுங்கீன பிரச்சினையில் மாட்டிக்கொண்ட டிக்வெல்லா, குணதிலகா, குசல்மென்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டனர். முந்தைய தொடருக்கான கேப்டன் குசல் பெரேரா காயத்தால் விலகினார். ஊதிய ஒப்பந்த விவகாரத்தால் ஆல்-ரவுண்டர் மேத்யூசும் இடம்பெறவில்லை. இதனால் இலங்கை அணி பலவீனமாக தென்படுகிறது.

எனவே இந்திய அணி வெற்றியோடு தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91-ல் இந்தியாவும், 56-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில் முடிவில்லை.

இந்திய அணி விபரம்:

ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி விபரம்:

அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *