செய்திகள்

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி: 17–ந் தேதி தொடக்கம்

கொழும்பு, ஜூலை 10–

இலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி 17-ந் தேதி தொடங்குகிறது.

இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா- – இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஒரு நாள் தொடர் வருகிற 13-ந் தேதி கொழும்பில் தொடங்க இருந்தது. இலங்கை அணிக்கு அந்த அணியின் ஆல்ரவுண்டர் தஸன் ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய தொடருக்காக நேற்று கொரோனா தடுப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்களது தனிமைப்படுத்துதலை மேலும் 2 நாட்கள் அதிகரித்து அதற்கு பிறகு மேலும் ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்கு தகுந்தபடி கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதனால் கொழும்பில் வருகிற 13-ந் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17-ந்தேதி நடக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ந் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *