நியூயார்க், ஏப். 9–
மும்பை பயங்கரவாத தாக்குதலின் முளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவர், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்தரவு பிறப்பிப்பு
ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான். நாடு கடத்தக் கூடாது என்ற அவருடைய கோரிக்கையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. நாடு கடத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நாடு கடத்த தேவையான உத்தரவுகளை பிறப்பித்து விட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர் இன்று அல்லது நாளை அதிகாலை இந்தியா அழைத்து வரப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்தியா வந்தவுடன் தஹாவூர் ராணா என்.ஐ.ஏ., அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஒரு வாரம் இருப்பார். பின்னர் டில்லி மற்றும் மும்பையில் உள்ள சிறைகளில், ஏதாவது ஒரு இடத்தில் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.