ராய்ப்பூர், ஜூன் 2–
இந்தியாவுக்கு யாரெனும் தீங்கிழைக்க முயன்றால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சத்தீஸ்கரிலும் நடப்பாண்டு இறுதியில் சட்டபேரவைத் தோதல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சத்தீஸ்கரின் காங்கோ மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:–
பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானிலிருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நமது வீரர்களை படுகொலை செய்தனர். அப்போது நான் உள்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அமைச்சர்கள் கூட்டம் நடத்தி 10 நிமிடங்களில் முக்கிய முடிவுகளை எடுத்தார்.
தக்க பதிலடி
அதையடுத்து, பாகிஸ்தானுக்குள் புகுந்து, நமது வீரர்கள் பலியானதற்கு காரணமான பயங்கரவாதிகளை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தவும் இந்தியாவைத் தூண்டிவிடவும் அண்டை நாடுகள் முயற்சிக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல தேவைப்பட்டால் எல்லை தாண்டி வந்தும் பயங்கரவாதிகளை வீழ்த்துவோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. ஆனால், மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர்களால் சுமத்த முடியாது. ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.