புதுடெல்லி, நவ.7-–
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனையில் ரஷியா முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2021–-2022 நிதிஆண்டில் இந்தியா கொள்முதல் செய்த மொத்த கச்சா எண்ணெயில் ரஷியாவிடம் இருந்து வாங்கியது, வெறும் 0.2 சதவீதம் மட்டுமே.
ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியா வாங்கிய மொத்த கச்சா எண்ணெயில் ரஷியா விற்பனை செய்தது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக அதிகமான கச்சா எண்ணெய் விற்பனை செய்து வந்த ஈராக், சவுதி அரேபியா ஆகியவை 2 மற்றும் 3–-வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.
அக்டோபர் மாதத்தில், நாள் ஒன்றுக்கு 9 லட்சத்து 35 ஆயிரத்து 556 பீப்பாய்கள் வீதம் இந்தியாவுக்கு ரஷியா விற்பனை செய்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியா மீது மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்தன. எனவே, ரஷியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்க முன்வந்தது. அதை பயன்படுத்தி, ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.