டாக்கா, ஆக. 8–
இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 600 வங்கதேசத்தினரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெடித்த மாணவர்களின் போராட்டம் மற்றும் கலவரத்தின் விளைவாக பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் அறிவித்தது.
அதன்படி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக இன்று பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில், தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 600 பேர் கொண்ட வங்கதேச குழுவை இந்திய எல்லை பாதுகாப்பு படை நேற்று மாலை தடுத்து நிறுத்தியிருக்கிறது.
தடுத்து நிறுத்தம்
இந்தக் குழு மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள தக்ஷின் பேருபாரி கிராமம் வழியாக எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அதிகாரியொருவர், “தாங்கள் தாக்கப்படுவோம் என்றும், கொல்லப்படுவோம் என்றும் அச்சப்படுவதாகக் கூறி, இந்தியாவுக்குள் தங்களை அனுமதிக்குமாறு எங்களிடம் அவர்கள் முறையிட்டபோது, உள்ளே அனுமதிக்க முடியாது என்பதை அவர்களுக்கு விளக்கினோம்” என்றனர்.
அதையடுத்து, குழுவிலிருந்த பலரும் கலைந்து சென்றாலும் சிலர் மட்டும் தாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் எல்லையருகே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக ஊடகத்திடம் பேசிய சிலர், முள்வேலிக்கு அருகே கூடியிருந்த குழுவினர் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சியதாகவும், தங்களுக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவங்களை விவரித்ததாகவும் தெரிவித்தனர்.
இதுவொருபுறமிருக்க, வங்கதேச ராணுவத்தில் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் ராணுவ உயரதிகாரி மேஜர் ஜியாவுல் அசான் (தொலைத் தொடர்பு நிர்வாகம்) அதிரடியாக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, நாட்டை விட்டு வெளியேறவும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.