உள்துறை அமைச்சகம் தகவல்
டெல்லி, ஜூலை 31–
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் (2019-2021) 13.13 லட்சம் சிறுமிகளும் பெண்களும் காணாமல் போயிருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சேகரித்தது. இந்தத் தகவல்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 2,51,430 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் அதிக அளவிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அங்கு 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இதே காலகட்டத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். மகாராஷ்டிரத்தில் 1,78,400 பெண்களும் 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில் இதே காலகட்டத்தில் 70,222 பெண்களும் 16,649 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். சத்தீஸ்கரில் 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர்.
டெல்லியில் அதிகம்
யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை, டெல்லியில் அதிக அளவிலான பெண்கள் காணாமல் போய்விட்டனர். டெல்லியில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் 2013ஆம் ஆண்டைய குற்றவியல் திருத்தச் சட்டமும் ஒன்றாகும். மேலும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க வகைசெய்யும் கடுமையான பிரிவுகளைக் கொண்ட 2018-ஆம் ஆண்டைய குற்றவியல் திருத்தச் சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர பெண்கள் தங்களது பிரச்னைகளை எடுத்துக்கூறி நிவாரணம் பெறுவதற்காக 112 என்ற இலவச தொலைபேசி எண்ணை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் ‘பாதுகாப்பான நகரம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.