டெல்லி, ஜூன் 9–
மிகவும் எதிர்பார்க்கப்படும் 71 வது உலக அழகிப் போட்டி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உலக அழகிப்போட்டி கடைசியாக 1996இல் நடைப்பெற்றது. இந்நிலையில் 71வது உலக அழகி இறுதிப் போட்டியின் புதிய வீடாக இந்தியாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் தனித்துவமான மாறுபட்ட கலாச்சாரத்தையும், உலகத் தரம் வாய்ந்த இடங்களையும் உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி நேற்று கூறினார்.
ஒரு மாதம் நடைபெறும் மிஸ் வேர்ல்டு போட்டியில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள். இதில் விளையாட்டுத் திறன், தனிச்சிறப்புத் திறன், தொண்டு மனப்பான்மை எனப் பல விஷயங்கள் பற்றியும் பேசப்படும். தற்போது போலந்து நாட்டின் கரோலினா பிலாஸ்கா மிஸ் வேர்ல்டாக உள்ளார்.
தற்போதைய உலக அழகி
இது குறித்து கரோலினா கூறுகையில், நான் எனது மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியா போன்ற அழகான நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு சூட்டுவதில் பெருமை கொள்கிறேன். உலகிலேயே இந்தியாவில் தான் விருந்தோம்பல் மிகமிக அதிகம். நான் இந்தியா வருவது இது இரண்டாவது முறை. நான் இதை ரசிக்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள். குடும்பம், நம்பிக்கை, அன்பு என உங்களின் பல்வேறு பண்புகளும் இந்த உலகுக்கே ஓர் எடுத்துக்காட்டு. இந்தியாவில் சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இங்கே கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவிலிருந்து வென்றவர்கள், ரீட்டா ஃபாரியா (1996), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷ் சில்லார் (2017) என 6 பேர் பெற்றுள்ளனர்.