செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 724 பேர் பாதிப்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 724 பேர் பாதிப்பு

இறப்பு விகிதம் குறைந்து வருகிறது

புதுடெல்லி, ஜூலை 22–

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 37 ஆயிரத்து 724 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சிறப்பு முதன்மை அதிகாரி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915. குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 49 ஆக உயர்ந்து, அதே நேரம் மீள்வோர் சதவீதம் 63.13 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084 லிருந்து 28,732ஆக உயர்ந்து உள்ளது.

இதுசம்பந்தமாக மத்திய சுகாதாரத் துறை சிறப்பு முதன்மை அதிகாரி ராஜேஷ் பூஷண் கூறியதாவது:–-

ஜூலை 17ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 3.36 லிருந்து 2.43ஆகக் குறைந்துள்ளது. இந்த தரவுகள், நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதை காட்டுகின்றன.

நாட்டில் கொரோனா தொற்றை 5 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வேண்டும் என இலக்கு வைத்து பணிகளைச் செய்து வருகிறோம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டில் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாக உள்ளன.

நாட்டில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் 20.40 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். அதுவே உலகளவில் இந்த இறப்பு விகிதம் 21 முதல் 33 மடங்கு வரை உள்ளது. ஜூலை 17–ம் தேதி நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 3.36 லிருந்து 2.43ஆகக் குறைந்து உள்ளது.

10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா

கொரோனா பரிசோதனைகளை பொறுத்தமட்டில் சராசரியாக நாட்டில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் நோய் பாதிப்பு சதவிகிதம் 5 சதவிகிதமாகக் குறைந்து விடும் என நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை இந்தியா மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. வல்லுநர்களின் வழிக்காட்டுதல்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *