செய்திகள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை

Makkal Kural Official

யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டெல்லி, ஜூலை 17–

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு பின்னால் இந்தியா உள்ளது.

நைஜீரியாவில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை 21 லட்சமாகும். இந்த புள்ளிவிவரம் சற்று நிம்மதியைத் தருகிறது. ஏனெனில் கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த ஆண்டில் நாட்டில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது.

பின்தங்கிய இந்தியா

உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெஃப் இணைந்து வெளியிட்ட தரவுகளின் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 நாடுகளின் பட்டியலில் சீனா 18-ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 10-ஆவது இடத்திலும் உள்ளன. 8 சார்க் கூட்டமைப்பு நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டவணையைப் பொறுத்து, ஒன்பது மாதம் அல்லது 12 மாதங்களில் செலுத்தப்படும் ‘எம்சிவி1’ தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்திய குழந்தைகளின் விகிதம் 93 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது உலகளாவிய சராசரியை விட (83 சதவீதம்) அதிகமாகும். இந்தியாவில் 15,92,000 குழந்தைகள் தங்களின் எம்சிவி1 தடுப்பூசியைக் கடந்த ஆண்டு தவறவிட்டுள்ளனர்.

18 மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான ‘எம்சிவி2’ தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் 90 சதவீதமாகவே கடந்த ஆண்டிலும் தொடர்ந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உள்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *