செய்திகள்

இந்தியாவில் 15 கோடி பேருக்கு மதுப்பழக்கம்: சமூக நீதி அமைச்சகம் பதில்

டெல்லி, ஜூலை 22–

இந்தியாவில் 15 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது எனவும் இதில் உத்திரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது எனவும் சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தின்போது உறுப்பினர் ஒருவர், நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரைக்கு எவ்வளவு பேர் அடிமையாக உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமூக நீதி அமைச்சகம் அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் 15 கோடியே 1 லட்சத்து 16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என்றும் உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பேர் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். அங்கு 3 கோடியே 86 லட்சத்து 11,000 பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

தமிழ்நாட்டில் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2 கோடியே 90 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 1 கோடியே 20 லட்சத்து 31,000 பேர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 4,000 பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்.

நாடு முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 44,000 பேர் போதை மாத்திரை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 54,000 பேர் போதை மாத்திரைக்கு அடிமையாக உள்ளனர். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் 8 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 850-க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *