செய்திகள்

இந்தியாவில் முழு சுகாதாரத்திட்டம் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் பேரைக் காப்பாற்றலாம்

டெல்லி, ஆக. 4–

சுகாதாரத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினால், ஆண்டுக்கு 3 லட்சம் பேரின் இறப்புகளைத் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு 2014 லம் தொடங்கியது. நாட்டில் உள்ள அனைத்து நகரங்களின் சாலைகள், கட்டமைப்புகள் ஆகியவற்றைத் தூய்மை செய்தல் மற்றும் நாடு முழுவதும் ஒரு திறந்தவெளி கழிப்பிடம்கூட இல்லாமல் ஆக்குவது, அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயக் கழிப்பறைகளை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

3 லட்சம் இறப்பு தடுக்கலாம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பொது இடங்களில் மலம் கழித்தலால் ஏற்படும் தொற்று நோய் போன்றவற்றால், ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், சுகாதாரத் திட்டத்தை 100 சதவிகிதம் முழுமையாகச் செயல்படுத்தி, அதை முறையாகப் பயன்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் இறப்புகளைத் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஐ.நா.சபையால் நடத்தப்பட்ட இந்திய சுகாதார திட்டம் குறித்த இந்த ஆய்வின் முடிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 89 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *