செய்திகள்

இந்தியாவில் பெண்களுக்கு சாதகமாக அதிக நகரங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு

சென்னை, மார்ச் 4–

இந்தியாவில் பெண்களுக்கு உகந்த நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை இடம்பிடித்துள்ளது.

“இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்” என்றார் மகாத்மா காந்தி. அவ்வாறான சூழலை உருவாக்கித் தந்துள்ள சிறந்த 5 இந்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அவதார் குழுமம். இந்தியாவில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் அந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சாதகமான பணிச் சூழல், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணி வழங்குவதில் கொடுக்கப்படும் முன்னுரிமை உள்ளிடவற்றை கணக்கில் கொள்கிறது. இதற்காக இந்தியாவில் 111 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் 8 நகரங்கள்

பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியனவற்றை முன்னெடுக்கும் சமூக சாதக சூழலைப் பொறுத்தவரையில், சென்னை உள்ளிட்ட சில நகரங்கள் முன்னேறிய இடத்தில் உள்ளன. சமூக ரீதியாகவும், தொழில்வள ரீதியாகவும் தமிழ்நாட்டின் 8 நகரங்கள், பெண்களுக்கு சாதகமாக சிறந்த 10 நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியா, பெண்களுக்கு தொழில் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் சாதகமான பகுதிகளாக உள்ளது. சென்னை, புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர், மதுரை ஆகியன இந்தியாவின் சிறந்த10 நகரங்களில் உள்ளன. அதாவது 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்களுக்கு தோதான நகரங்களாக உள்ளன.

திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, ஷிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம், பெலகாவி போன்ற நகரங்கள், 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மகளிருக்கு உகந்த நகரங்களாக உள்ளன. ஆனால் மாநில சராசரியைப் பொறுத்தவரை கேரளா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிராம், இமாச்சல், கர்நாடகா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்தியாவின் மற்ற இடங்கள்

வட இந்தியாவைப் பொறுத்த வரை டெல்லி, சிறீநகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களையும் தென் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் முதல் மூன்று இடங்களையும் பிடிக்கின்றன. கிழக்குப் பகுதியில் கொல்கத்தா, தன்பாத், பாட்னா முறையே ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்களையும் மேற்குப் பகுதியில் புனே, மும்பை, அகமதாபாத் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. மத்திய பகுதியில் ராய்பூர், இந்தூர், போபால் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த அறிக்கையானது லேபர் ஃபோர்ஸ் சர்வே, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, குற்ற ஆவணங்கள், குடும்ப நல சர்வே, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக ஆண்டறிக்கை ஆகியனவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *