முழு தகவல்

இந்தியாவில் பெண்களால் உருவான புகழ் பெற்ற நினைவுச் சின்னங்கள்!


சிறப்புக் கட்டுரை : ராகவி ஹரி


ஒரு நாட்டின் புகழ் பெற்ற இடங்களே, அந்த நாட்டின் பெருமிதங்களாக உள்ளது. மானுட வரலாற்று சிறப்புகளை அடையாளம் காட்டுவது ,பெரும்பாலும் புகழ்பெற்ற கட்டிடங்களாகவே உள்ளது. அந்த வகையில், இந்தியா பல்வேறு வகையான கலாச்சாரத்திற்கும், கட்டிட பாரம்பரியத்திற்கும் புகழ் பெற்றது.

எடுத்துக்காட்டாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி என்றாலே, யுனெஸ்கோவால்(UNESCO) உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட தாஜ்மஹால் நினைவுக்கு வரும். அந்த வகையில் கால ஓட்டத்தையும் கடந்து கம்பீரமாக நிற்கும் பல நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் அரசர்களால் கட்டப்பட்டு இருந்தாலும் சில நினைவுச் சின்னங்கள் பெண்களால் கட்டப் பட்டுள்ளன என்பது வியப்பாக இருக்கலாம்.

இந்தியாவில் அறியப்பட்ட முதல் நாகரீகமான சிந்துச் சமவெளி நாகரீகமே, தாய் வழி சமூகம் தான். பெண்களால்தான் குடும்பங்கள் வழிநடத்தப்பட்டது. இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்திய பெண்களின் சம உரிமைகளுக்காக, அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி வந்துள்ளனர். சதி, குழந்தை திருமணம், பாலின பாகுபாடு போன்றவைகளை பல நூற்றாண்டுகளாய் கடந்து இன்றைய கால பெண்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தூணாக நிற்கிறார்கள்.

பெண்களின் பன்முக திறமை

கல்வி, பொருளாதாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் சாதிக்கும் பன்முகத் திறமை கொண்டவர்களாக பெண்கள் விளங்குகிறார்கள். நவீன உலகில் பெண்களின் மதிப்பும் உரிமையும் கொண்டாடப்படுகிறது. இடைக் காலத்தில், பெண்களை அலங்கரிக்கும் ஆற்றல் ஆணுக்கு மட்டுமே இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கோலோச்சுவது போலவே இலக்கியத்திலும் உயர்ந்து நிற்கிறாள்.

ஆட்சிப் பொறுப்பில் ஆண்களே இருந்த இந்தியாவில், 1236ஆம் ஆண்டு டெல்லியின் சுல்தானாக பதவியேற்ற முதல் பெண் ரசியா சுல்தான். அவள் தொடங்கி விடுதலைப் போராட்ட வீராங்கனையான இராணி வேலுநாச்சியார் வரை, வரலாற்றில் பெண்களின் வலிமை பேசப்பட்டுள்ளது. இசை, ஓவியம், இலக்கியம் உள்ளிட்ட கலைகளில் திறமை மிகுந்த பெண்களின் பங்கு இருக்கிறது.

அரசர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் சூழ்ந்த இந்தியாவில், காலத்தை கடந்து கம்பீரமாக நின்று, நமது நாட்டின் கலை, பண்பாடு, கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றுவதில் இந்திய பெண்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. அப்படி இந்திய பெண்களால் கட்டப்பட்ட பல புகழ்பெற்ற நினைவு சின்னங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்…

1.இத்மத் உத் தௌலா கல்லறை

ஜஹாங்கீரின் புகழ்பெற்ற ராணியான நூர்ஜஹான், தனது தந்தை மிர்சா கியாஸ் பேக்கிற்கு 1628 ஆம் ஆண்டில் ஆக்ராவில் கட்டப்பட்ட கல்லறை. தாஜ்மஹால் உருவாவதற்கான ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுவதால், இது ‘குட்டி தாஜ் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. 23 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்லறை மாளிகை யமுனை நதியின் கிழக்குக் கரையில் உள்ளது.

சிவப்புக் கற்களால் ஆன ஒரு பீட அமைப்பின் மீது, சுற்றிலும் சார்பாக் எனப்படும் அழகிய பாரசிக பாணி பூங்கா சூழ்ந்திருக்கும் படியாக இது வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் பாரசீக கட்டிடக்கலையின் தாக்கத்தை இந்த நினைவுச் சின்னத்தில் அனுபவிக்க முடிகிறது.

2.ஹுமாயூனின் கல்லறை

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் ஒன்றான, ஹுமாயூனின் கல்லறை டெல்லியில் உள்ள நிஜாமுதீன் கிழக்கின் ஒரு பகுதியில் உள்ளது. முகலாய கட்டிடக்கலையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படும் இந்த பிரமாண்டமான சிவப்பு மணற்கல் கல்லறை, பாரசீக கட்டிடக்கலைஞரான மிராக் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. முகலாய பேரரசர் ஹுமாயூன் நினைவாக அவரது ராணியான ஹமிதா பானு பேகம், 1569 இல் கல்லறையை நிறுவினார். ஹுமாயூன் இறந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த கல்லறை நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

3.விருபாக்ஷா கோயில்

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள முக்கிய யாத்திரை மையங்களில் ஒன்றான விருபாக்ஷா கோயில் பல நூற்றாண்டிற்கு முன்பு ராணி லோகமகா தேவியால் கட்டப்பட்டது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தியன், பல்லவர்களை வெற்றி பெற்றதன் நினைவாக இதை கட்டியுள்ளார். சிவபெருமான் – பம்பா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் லோகமஹாதேவி கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மையத்தில் இருக்கும் ரங்க மண்டபத்தின் கோபுர நிழல் ஒரு தூண் மண்டப அறையில் தலைகீழாக தெரிவது இதன் சிறப்பு.

4.ராணி கி வாவ்

குஜராத் மாநிலம் பதான் நகரில் பசுமையான புல்வெளிக்கு நடுவே இந்த பிரம்மாண்டமான படிக்கிணறு அமைந்துள்ளது. சோலாங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக, ராணி உதயமதியால் இந்தப்படிக் கிணறு தொடங்கப்பட்டது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்ல இதன் கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே, சுரங்கப் பாதை செல்கிறது. குஜராத் மாநிலத்தில் மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் மழை நீரைச் சேமிக்கும் இடமாகவும் இந்தப் படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன.

5.மோகினிஷ்வரா சிவாலய கோவில்

காஷ்மீர் குல்மார்க் நகரின் அழகிய பனி படர்ந்த மலைகளின் பின்னணியில், ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது இந்த கோவில். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த அப்போதைய காஷ்மீர் அரசர் ஹரி சிங்கின் மனைவியான மகாராணி மோகினி பாய் சிசோடியாவால் 1915 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. குல்மார்க்கின் அனைத்து மூலைகளிலிருந்தும் தெரியும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

6. மிர்ஜான் கோட்டை

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் அகனாஷினி ஆற்றின் கரையில் இந்த கோட்டை அமைந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிளகு ராணி என்றும் அழைக்கப்பட்ட கெர்சோப்பாவின் ராணி சென்னபைரா தேவியால் கட்டப்பட்டது. மிர்ஜான் கோட்டையில் தங்கியிருந்த ராணி, மிளகு மற்றும் வெற்றிலை துறைமுக வணிகத்திற்கு இந்த கோட்டையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

––இராகவி ஹரி.

Leave a Reply

Your email address will not be published.