செய்திகள்

இந்தியாவில் புலிகளை பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

சென்னை, செப்.16-

இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள புலி இனங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் புலி இனம் அழிந்து வருவதால், அவற்றைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காடுகளை அழித்தல், புலிகளை வேட்டையாடுதல், பருவ நிலை மாற்றம் போன்ற காரணங்களால் உலகில் 93% புலிகள் அழிந்துவிட்டது. இதனால், பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் புலி முதலிடத்தில் உள்ளது. புலிகளைப் பாதுகாக்கும் வகையில்,ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

1900 களில் உலகில் 1 லட்சம் புலிகள் இருந்தது. 2016ல் எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் படி உலகில் மொத்தமாக 3,890 புலிகள் மட்டுமே உள்ளது. இவை அனைத்தும், வெப்பமண்டல மழைக் காடுகள், பசுமையான காடுகள், அடர்ந்த காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் ஆசிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமல்லாமல் பங்களாதேஷ், மலேசியா, தென் கொரியா, மியான்மார், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் புலி தேசிய விலங்காக உள்ளது. உலகில் வாழும் புலிகளில் 60% க்கும் மேலான புலிகள் இந்தியாவிலேயே உள்ளன. இந்தியாவிலேயே புலிகள் அதிகமுள்ள மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்திலும், உத்தரகாண்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்தியாவில் சுமார் 25 புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகளை வேட்டையாடுவது, விஷம் வைப்பது, மின்சாரக் கம்பிகளை அமைப்பது , சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1,411ஆகக் குறைந்தது. புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு, சட்டவிரோதமாக வேட்டையாடுதலே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் காரணமாக 2010ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 1,706 ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, புலிகளை பாதுகாக்க என்டிடிவி ஏர்செல் மூலம் “புலிகளைக் காப்போம்” வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் “நமது புலிகளை காப்போம்” உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொண்டது. எனினும், 2012ல் இருந்து தற்போது வரை அழிந்துள்ள புலிகளில் 40% வேட்டையாடியதாலேயே அழிக்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் வேட்டையாடுவதிலிருந்து அவற்றைக் காப்பாற்ற முடியவில்லை.

அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க, புலிகள் சரணாலயத்தை அதிகரித்தும், வன பாதுகாப்பை மேம்படுத்தியும் வருகின்றனர். மேலும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கைகளைத் தவிர செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளால், மனிதனின் தலையீடு இல்லாமல் அவற்றின் இனத்தைப் பெருக்க முடியும். எனினும், அவற்றிற்கு மனிதனின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவற்றைப் பாதுகாக்க தொழில்நுட்பம் தான் ஒரே வழி. உதாரணமாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ‘எம்-ஸ்ட்ரைப்ஸ்’ மற்றும் ‘இ-ஐ’ போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகளைப் பாதுகாத்து வருகிறது.

எம்-ஸ்ட்ரைப்ஸ்

பொதுவாக வனப் பகுதிக்குள் நேரில் பார்க்கும் விலங்குகள், விலங்குகளின் எச்சங்கள், கால்தடங்கள், நகக் கீறல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஆண்டு விலங்குகள் குறித்த தகவல்களைப் பதிவிட எம்-ஸ்ட்ரைப்ஸ் எனும் செல்போன் செயலியை முதல்முறையாக வன குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பார்க்கும் விலங்குகள், தடயங்கள், எச்சங்கள், உள்ளிட்ட விபரங்களை படங்களாகவும், புள்ளி விபரங்களாகவும் செல்போனுடன் இணைக்கப்பட்ட எம்-ஸ்ட்ரைப்ஸ் செயலியில் பதிவிட முடியும். மேலும், சட்ட விரோத செயல்களை கண்காணிக்க வனத்துறையினர் புலிகள் இருக்கும் பகுதிகளுக்குள் ரோந்து பணியில் ஈடுபடவும் இந்த எம்-ஸ்ட்ரைப்ஸ் செயலி உதவுகிறது.

இ-கேமராக்கள்

உத்தரகாண்ட் மாநிலம், நைனிட்டால் மாவட்டம் ராம்நகரில் உள்ள கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ‘இ-ஐ’ என்னும் இ-கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 360 டிகிரி கோணத்தில் இந்த இன்ப்ரா ரெட் கேமரா செயல்படும். 300சதுர மீட்டர் தொலைவு வரை 20 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட எதுவாக இருந்தாலும், இந்த கேமராவின் மூலம் கண்டறிய முடியும். 24 மணி நேரமும் இந்த கேமரா வீடியோக்களை பதிவு செய்யும். இதனால், எந்தப் பகுதியில் அதிகளவில் வேட்டைகள் நடைபெறுகிறது என்பதையும், யானை போன்ற பெரிய விலங்குகள் இடம்பெயரும் இடத்தையும் கண்டறிய முடியும்.

மனித நடமாட்டம் தென்பட்டால், இந்த கேமரா எச்சரிக்கை ஒலியெழுப்பும். அதன்மூலம் விலங்குகளை வேட்டையாடுபவர்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். இதிலும் ஒரு சிக்கல் நிலவுகிறது. வனத்துறையினர் ரோந்து வரும் பகுதிகளை அறிந்துள்ள வேட்டைக்காரர்கள் வனத்துறையினர் சென்ற பிறகு வேட்டையில் ஈடுபடுகின்றனர். தவிர, விலங்குகள் வசிக்கும் இடங்கள், கேமரா பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அனைத்தையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ளது. சட்டத்தின் பிடியில் இருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் அவர்கள் விலங்குகளை புத்திசாலித்தனமாக வேட்டையாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் வனப் பாதுகாப்புக்காக ட்ரோன்கள், இன்ப்ரா ரெட் கேமராக்கள், கண்காணிப்பு சாதனங்கள், ரேடியோ ப்ரிக்வென்சி ஐடெண்டிபிகேசன் சாதனங்கள்

மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தும் வகையில் இருந்தால், மேலும் பயனுள்ளதாக இருக்கும். வேட்டையாடும் அறிகுறிகள், வனவியல் கவனிப்பு, வன குற்றவியல் கைதுகள், விலங்குகளின் நடமாட்டம், ரோந்து பணிகள் ஆகியவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், வரைபடங்களாகவும், அறிக்கைகளாகவும் மாற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு பட செயலாக்கத்தையும், கணிப்பு பகுப்பாய்வையும் வரைபடத்தில் கொண்டு வந்தால், வனத்தைக் கண்காணிக்க உதவியாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

அமெரிக்காவில் உள்ள செயற்கை நுண்ணறிவுக்கான தெற்கு கலிபோர்னியா மையத்தின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வேட்டையில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறியும் வகையில் ஸ்பாட் என்னும் கருவியை வடிவமைத்துள்ளனர். இன்ப்ரா ரெட் கேமராக்களால் சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் வெப்பத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டை காணமுடியவில்லை. இன்ப்ரா ரெட் கேமராக்கள் எடுத்த 1லட்சத்து 80ஆயிரம் வெப்ப வரைபடங்களில் மனிதர்களையும், விலங்குகளையும் வேறுபடுத்தி கண்டறிய கடினமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பாட் தொழில்நுட்பம் ஜிம்பாவே, மாலாவி தேசிய பூங்காக்களில் பயன்படுத்தப்படுகிறது. வேட்டையாடுபவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், விலங்குகள் எந்த இடத்தில் உள்ளன போன்ற தகவல்களை இன்ப்ரா ரெட் ட்ரோன் கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் நொடிப் பொழுதில் வழங்கி வருகிறது.

அதேபோல் பாவ்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 5 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா, உகாண்டா ஆகிய நாடுகளில் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள புலிகளை பாதுகாக்கவும், புலி வேட்டைகளைத் தடுப்பதற்கும் இந்த திட்டம் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் நிலப்பரப்பு மற்றும் நிலப்பகுதியைப் ஆய்வு செய்து, விலங்குகள் நடமாடும் பகுதி, வேட்டையாடுபவர்களால் தவிர்க்கப்படும் ரோந்து பகுதி ஆகியவற்றை கணித்து கூறும். அதன் மூலம், வேட்டையாடுபவர்கள் எந்தப் பகுதியை தேர்ந்தெடுப்பார்கள், எந்த பகுதியை தவிர்க்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.

பாவ்ஸ் திட்டம்

இந்தியா உள்ளடக்கிய 13 நாடுகள் உதவியுடன் இண்டர்போல் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு போலீசார் ஆபரேஷன் ‘பாவ்ஸ்’ என்ற பெயரில் 2014ஆம் ஆண்டு, ஜூலை முதல் நவம்பர் வரை வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் புலிகள், சிறுத்தைகள், மான்கள், குரங்குகள், சிகப்பு பாண்டாக்கள், சிங்கங்கள், முதலைகள், 3500 கிலோ யானை தந்தம், 280 கிலோ எறும்புண்ணி தோல், காண்டாமிருக கொம்புகள் மற்றும் 4,000 கிலோ செம்மரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, வன பாதுகாவலர்களும், வன பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளும், பாவ்ஸ் தொழில்நுட்பத்துடன் கேப்ட்சர் என்னும் மற்றொரு தொழில்நுட்பத்தை இணைத்தனர். கேப்ட்சர் தொழில்நுட்பம் எந்த இடத்தில் வேட்டைகள் நடக்கலாம் என்பதை கணித்து, தகவல்களை வழங்கும். இந்தியாவில், புலிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, தொடரும் புலி வேட்டைகளைத் தடுப்பதன் மூலமே புலிகளை பாதுகாக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, இன்ப்ரா ரெட் கேமராக்கள், ட்ரோன்கள மற்றும் வன அதிகாரிகள் மூலம் புலிகளை பாதுகாத்து வந்தாலும், செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் நடக்கும் புலிகள் வேட்டையைத் தடுக்க பெரிதும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *