டெல்லி, ஜன. 6–
இந்தியாவில் புதிதாக ஒமிக்ரான் கொரோனா தொற்றின் 11 விதமான துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அண்மை காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிர படுத்த இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
புதிதாக 11 துணை வகைகள்
அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு விமானத்திலும் 2 சதவீத பயணிகளுக்கு கட்டாய கொரானா பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகள் மரபணு மாற்றுவரிசை முறை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.
அவ்வாறு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 19,227 பேருக்கு தோற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மரபணு மாற்றுவரிசை முறை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் உருமறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றில் புதியதாக 11 விதமான துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.