செய்திகள்

பீடி புகைப்பதால் 5.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு

Makkal Kural Official

ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, செப். 9–

பீடி புகைப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் மற்றும் பொருளாதாரச் சுமைகள் குறித்து ஜோத்பூர் எய்ம்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் கடந்தாண்டு மட்டும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவான ஆய்வில், பீடி புகைப்பதால் சத்தீஸ்கரில் கடந்த 2023 ஆம் ஆண்டு 11,011 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் 4.1 சதவீத மக்கள் பீடி புகைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாநிலங்களிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகாரஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முறையே 50,000 மற்றும் 42,000 -க்கும் மேற்பட்டோர் பீடி புகைப்பதால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக ஆண்டுக்கு 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பீடி புகைப்பதால் உயிரிழப்பதாகவும், நாட்டில் 7.7% மக்கள் புகையிலை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் அவதானிப்புகளின்படி, சிகரெட் புகைப்பது குறித்தும், அதனால் வரும் தீங்குகள் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் இதுவரை வெளியாகியுள்ளன. ஆனால், மற்ற புகையிலை வகைகள் தொடர்பான ஆய்வுகள் அதிகளவில் நடத்தப்படவில்லை.

பீடி புகைப்பதால் வரும் உடல் கோளாறுகள் குறித்து இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டத் தகவல்களின்படி நுரையீரல் புற்றுநோய் (0.39%), காசநோய் (0.20%), வாய் புற்றுநோய் (0.32%), இதய பாதிப்பு (0.17%) ஆகியவை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சிகரெட் புகைப்பதை விட பீடி புகைப்பதால் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிகரெட்டை விட பீடி விலை மலிவாக உள்ளதால் அதிகளவிலான மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

ராய்ப்பூரில் சமீபத்தில் மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாடு அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுகாதாரம், கலால், தொழிலாளர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநில புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் தலைமை அதிகாரி டாக்டர் கமலேஷ் ஜெயின் புகையிலையின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புகையிலைப் பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் ஆரோக்கியம் தொடர்பான எச்சரிக்கையையும் மீறி மக்கள் புகையிலைக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறிய அவர், உடல் ஆரோக்கியம் தவிர, எய்ம்ஸ் ஆய்வு பீடி புகைப்பவர்களின் பொருளாதாரச் சுமைகள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *