போஸ்டர் செய்தி

இந்தியாவில் பாதிப்பு 649; பலி 16ஆக உயர்வு

Spread the love

புதுடெல்லி, மார்ச் 26

ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 26ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

42 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகரில் 65 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று நோய் தாக்கி உயிரிழந்துள்ளார். இதனை ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் உறுதி செய்துள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் அந்த முதியவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிராவில் இன்று ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குஜராத்திலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 4 பேருக்கு கொரோனா இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில்…

தமிழகத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3-ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது சளி, இரத்த மாதிரிகள் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அந்த நபர் உயிரிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகே, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *