தொற்று காரணமாக 14 பேர் பலி
டெல்லி, ஏப். 10–
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தொற்றால் 14 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா டெஸ்டிங் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரே நாளில் 5880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 5,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 35,199ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 14 பேர் பலி
நாட்டில் நேற்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதில், இமாச்சல் பிரதேசம், டெல்லியில் தலா 4 பேரும், கேரளாவில் 2 பேரும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 5,30,979 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 4 கோடியே 41 லட்சத்து 96,318 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.