வியன்னா, ஜூலை 11-–
2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
இதனையடுத்து ‘‘இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்’ என ஆஸ்திரிய தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி கடந்த 8-ம்தேதி முதல் ரஷியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதில் ரஷிய பயணத்தை நேற்று முன்தினம் முடித்துக்கொண்ட அவர், மாலையில் ஆஸ்திரியா சென்றார்.
தலைநகர் வியன்னாவில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பிரதமர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளித்து கவுரவிக்கப்பட்டது.
பின்னர் அந்த நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மோடியை நெகம்மர் கட்டித்தழுவி வரவேற்றார்.
மேலும், இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்தப் படங்களை, 2 பிரதமர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு அரசியல் சவால்களில் இருதரப்பு உறவையும், நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் ஆழமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் உக்ரைன் போர், மேற்கு ஆசிய நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-– எனது 3-வது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. கடந்த 41 ஆண்டுகளில் எந்த இந்தியப் பிரத மரும் ஆஸ்திரியாவுக்கு வந்ததில்லை.
பரஸ்பர ஒத்துழைப்பு
இன்று (நேற்று) பிரதமர் நெகம்மரும், நானும் மிகவும் பயனுள்ள விவாதத்தில் ஈடுபட்ேடாம். எங்கள் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்டுகொண்டோம்.
எங்கள் உறவுக்கு ஒரு வியூகம் சார்ந்த திசையை வழங்க முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் தசாப்தத்தில் ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,
உக்ரைன், மேற்கு ஆசியா என உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மோதல்கள் குறித்து நாங்கள் விரிவாக பேசினோம். இது போருக்கான நேரம் அல்ல என்பதை நான் முன்னரே கூறினேன். இந்த பிரச்சினைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு காண முடியாது. இதில் பேச்சுவார்த்தையும், தூதரக ரீதியான நடவடிக்கைகளையே இந்தியாவும், ஆஸ்திரியாவும் விரும்புகிறது. இதற்காக எந்த உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பயங்கரவாதத்தை இந்தியாவும், ஆஸ்திரியாவும் கடுமையாக கண்டிக்கிறது. எந்த வகையிலும் அதை ஏற்க முடியாது என்பதையும், அதை எந்த வழியிலும் நியாயப்படுத்த முடியாது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்பீடுகளில் பகிரப்பட்ட நம்பிக்கை இந்தியா-ஆஸ்திரியா உறவுகளின் வலுவான அடித்தளமாகும். பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட நலன்கள் எங்கள் உறவுகளை பலப்படுத்துகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், ரஷியா-–உக்ரைன் அமைதி நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. உக்ரைன் பிரச்சினை தொடர்பாக மோடியுடன் நான் ஆலோசனை நடத்தினேன். மத்திய கிழக்கு மோதலும் ஒரு முக்கிய தலைப்பாக இருந்தது. ஆஸ்திரியாவுக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி ரஷியாவில் புதினை சந்தித்து இருக்கிறார்.
எனவே அமைதி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ரஷியாவின் நோக்கங்கள் குறித்து மோடியின் தனிப்பட்ட மதிப்பீட்டை கேட்பது மிகவும் முக்கியமானது.
உலகளாவிய தெற்கு என்று அழைக்கப்படும் இந்தியாவின் தனித்துவமான நிலை குறித்து பிரதமர் மோடியும் நானும் விவாதித்தோம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனவே, இந்தியாவின் பங்கு, குறிப்பாக ஆஸ்திரியாவுக்கு, அமைதி செயல்முறை மற்றும் எதிர்கால அமைதி உச்சி மாநாடுகளுக்கு முக்கியமானது.
இவ்வாறு கார்ல் நெகம்மர் கூறினார்.
தொழில் அதிபர்களுக்கு அழைப்பு
பிரதமர் மோடி , ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மருடன் இணைந்து இருநாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு ஆஸ்திரியா தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உயர்ந்த தரம் மற்றும் செலவு குறைந்த உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் அங்கமாக மாறுங்கள் என தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள், சோலார், செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியாவின் வேட்கையையும் எடுத்துக்கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்தியா மற்றும் ஆஸ்திரியா வர்த்தக தலைவர்களை சந்தித்தேன். வியாபாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்கு பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதில் நமது நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன’ என குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியா இந்த உலகுக்கு
புத்தரை கொடுத்துள்ளது
அதன் பின்னர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: இந்தியா மிகப்பெரிய இலக்குகளை எட்டி உயரிய மைல்கல்களைத் தொடுவதில் சிறப்பாக, பிரகாசமாக இயங்கி வருகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் எங்களின் அறிவாற்றலையும், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறோம். நாங்கள் உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரைக் கொடுத்துள்ளோம். அந்த வகையில் இந்தியா எப்போதும் அமைதியையும், வளத்தையும் இத்தேசத்துக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவில் நடந்த தேர்தல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் 650 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.
கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய தேர்தல் நடந்தும், சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதுதான் எங்கள் தேர்தல் அமைப்பு மற்றும் எங்கள் ஜனநாயகத்தின் பலம். இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். பன்முகத்தன்மை கொண்ட இந்த போட்டிக்குப் பிறகுதான் மக்கள் தங்கள் ஆணையை வழங்கினர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியாவில் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது என்றார்.
டெல்லி திரும்பினார் பிரதமர்
ரஷ்யா, ஆஸ்திரிய பயணத்தை முடித்து இன்று காலையில் பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர்.