உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
நியூயார்க், ஜன. 12–
உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்தியாவில் தயாராகும் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் ‘மேரியன் பயோடெக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் குற்றம் சாட்டியது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 மருந்துகளும் உகந்ததல்ல
இதனைத் தொடர்ந்து, ‘மேரியன் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் ‘டோக்-1 மேக்ஸ்’ மற்றும் ‘அம்ப்ரோனால்’ என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது. இதில், இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபரில் உயிரிழந்தனா். இதற்கு, அரியாணா மாநிலம், சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சா்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக நலவாழ்வு அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறும் அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.