டெல்லி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வாசிப்பு
புதுடெல்லி, ஏப்.25-–
இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துரையை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வில்சன் எம்.பி. வாசித்தார். அந்த வாழ்த்து அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது என கருதுகிறேன். சமூகநீதிக்கான ஒளிவிளக்காக தமிழ்நாடு திகழும் மரபு 1921-ம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 59% இடஒதுக்கீடு
விடுதலைக்கு பிறகு, இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதை இந்த சட்டத்திருத்தம் உறுதிசெய்தது.
தற்போது பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடி யினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69 சதவீதமாக உள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50-ஐ தாண்டக்கூடாது என தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதலாக தமிழ்நாட்டில் இது நடைமுறையில் இருக்கிறது.
குறிப்பாக, தொழில்முறை பட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதி செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம். மேலும், கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதை கண்டு நான் பெருமையடைகிறேன். அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதி களை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.