செய்திகள்

இந்தியாவில் கொரோனா 3வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது -மத்திய வல்லுனர் குழு தகவல்

புதுடெல்லி, மே 20–

இந்தியாவில் 6 முதல் 8 மாதங்களில் கொரோனா பரவலின் 3வது அலை ஏற்படலாம்; அப்போது அதிகப்படியானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பாதிப்பு பெரியளவில் இருக்காது என, மத்திய அரசின் வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை மெல்லக் குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா 2வது அலையின் தாக்கம் உச்சத்தை நெருங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா 3வது அலை பற்றிய கணிப்புகளை வல்லுனர் குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு ‘சூத்ரா’ என்ற கணித முறையின் அடிப்படையில் கொரோனா பரவல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்த குழுவின் உறுப்பினரும் ஐ.ஐ.டி., கான்பூர் பேராசிரியருமான மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளதாவது:

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்னாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகண்ட், குஜராத், அரியானா, டெல்லி, கோவா போன்ற மாநிலங்கள் கொரோனா 2வது அலை ஏற்கனவே உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் மே மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகக் குறையும். ஜூன் இறுதியில் இது மேலும் குறைந்து 20 ஆயிரமாக இருக்கும். தமிழகத்தில் வரும் மே 29–31 தேதிகளிலும், புதுச்சேரியில் 19–20 தேதிகளிலும் கொரோனா உச்சமடையும். அதேபோல் வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் விரைவில் 2வது அலை உச்சத்தைத் தொடும்.

இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம். அப்போது அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதாலும், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதாலும் பாதிப்பு பெரியளவில் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *