உலக சுகாதார அமைப்புக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
டெல்லி, மே 24–
இந்தியாவில் கொரோனா இறப்பை 45 லட்சம் என அதிகப்படுத்தி அறிக்கை வெளியிட்ட, உலக சுகாதார அமைப்புக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உலக சுகாதார மாநாட்டில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அண்மையில் இந்தியாவில் 45 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
மாநில அமைச்சர்கள் மறுப்பு
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள 23 மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் ஒன்றுகூடி உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும் இந்திய அரசு சட்டப்படி, உருவாக்கிய வலுவான மற்றும் துல்லியமான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை உலக சுகாதார அமைப்பு நம்பக்கூடாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்துறை தொழில்நுட்ப இயக்குனர் வில்லியம், தரவுகளின் படி இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் நேர்ந்து இருப்பதாக குறிப்பிட்டார்.