லேன்செட் ஆய்வு தகவல்
சென்னை, ஜுலை 11–
வயது வந்த நபர்கள் மத்தியில் உடல்சார்ந்த செயலின்மை மீது லேன்செட் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கைக்கு டாக்டர். ஆர்எம். அஞ்சனாவை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் ஆசியாவின் மிகப்பெரிய, தனித்து நின்று செயல்படும் நீரிழிவு ஆராய்ச்சி மையமான தி மெட்ராஸ் டயாபெட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் (MDRF), இந்தியாவிலிருந்து இது தொடர்பான தரவுகளை பங்களிப்பாக வழங்கியிருந்தது.
வயது வந்த நபர்கள் மத்தியில் உடல்சார்ந்த செயல்பாடு குறைவாக இருப்பதன் தீவிரத்தையும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீது இதனால் ஏற்படும் பாதிப்பையும் இத்தரவு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்தியர்கள் மத்தியில் உடல்சார் இயக்க செயல்பாடு கணிசமான அளவு குறைவாக காணப்படுகிறது.
2000 ஆண்டி-ல் 22% ஆக இருந்த இது, 2022-ம் ஆண்டில் 49.5% ஆக உயர்ந்திருக்கிறது. உடல்சார் செயல்பாட்டைப் பொறுத்தவரை இந்திய பெண்களில் 57.2% நபர்களும் மற்றும் ஆண்களில் 42% நபர்களும் குறைவான உடல் செயல்பாடு உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். மேலும் இந்த இரு பாலினத்தவருக்கு இடையே இவ்விஷயத்தில் 15% வித்தியாசம் இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.
உடல்சார் செயல்பாடின்மை என்பது, இருதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோயின் சில வகைகள் போன்ற தொற்றா நோய்களுக்கு ஒரு முக்கியமான இடர் காரணியாக இருப்பதால், இப்பிரச்சனையை கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசரத்தையும், அவசியத்தையும் டாக்டர். ரஞ்சனா வலியுறுத்துகிறார். தொடர்ந்து தவறாமல் உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பை உள்ளடக்கிய செயல்பாட்டில் ஈடுபடுவது இத்தகைய நோய்களுக்கான இடர் வாய்ப்பை குறைக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
“நடப்பு போக்குகள் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளன”. இது தடுக்கப்படாமல் உதாசீனம் செய்யப்படுமானால், போதுமான அளவு இல்லாத உடல்சார் செயல்பாட்டை 15% குறைப்பதற்கான உலக சுகாதார அசெம்ப்ளியின் 2030 இலக்கு எட்டப்படாமலேயே போய்விடும். தனிநபர்களுக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்.
ஆண்களை விட பெண்களில் செயலின்மையின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இந்த வேறுபாடு ஏறக்குறைய 15% என்ற அளவில் காணப்படுகிறது. தொற்றா நோய்களின் காரணமாக உருவாகும் எதிர்கால சிக்கல்கள் வராமல் தடுக்க தனிநபர்களாக, குடும்பங்களாக மற்றும் சமூகங்களாக நமது உடல்சார்ந்த செயல்பாடுகளை அதிகரிப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான அறைகூவலாக இதை நாம் கருத வேண்டும்.” என்றார் டாக்டர். அஞ்சனா.
தமிழ்நாட்டில் கார்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஞாயிறு தினம், யோகா பயிற்சிகள் மீதான வலியுறுத்தல், அதிக பூங்காக்களை நிறுவுவது, ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற ஆரோக்கியமான கொள்கை முன்னெடுப்புகளை பாராட்டிய டாக்டர். அஞ்சனா, தெற்காசியாவில் உடல்சார் செயல்பாடின்மை அதிகஅளவில் இருப்பதற்கு பல காரணங்களை குறிப்பிடுகிறார். நவீன மயமாக்கலின் காரணமாக, உடலுழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, உடல் நலத்தை விட கல்வி செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரதாக்கங்கள், பாதுகாப்பான வெளியரங்க இடங்களுக்கு குறைவான அணுகு வசதி, உடற்பயிற்சியின் பலன்கள் பற்றிய விழிப்புணர்வின்மை, பெண்களின் பங்கேற்பை கட்டுப்படுத்தும் பாரம்பரியமான பாலின கண்ணோட்டங்கள் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் ஆகியவை இவற்றுள் சிலவாகும். தெற்காசிய சமூகங்களில் அதிக உடலுழைப்பும், உடற்பயிற்சியும் உள்ள வாழ்க்கையை முறையை ஊக்குவிக்க சமூக பொருளாதார ஏற்ற இறக்கங்களையும் மற்றும் கலாச்சார கண்ணோட்டங்களையும் கருத்தில் கொள்கின்ற இலக்குடன் கூடிய செயல்திட்டங்களை அவசியமாக மேற்கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.
“வயது வந்த நபர்கள் மத்தியில் போதுமான அளவு உடல்சார் செயல்பாடின்மை மீதான தேசிய பிராந்திய மற்றும் உலகளவிலான போக்குகள்” என்ற தலைப்பிலான இந்த லேன்செட் ஆய்வு, 197 நாடுகளில், 5.7 மில்லியன் பங்கேற்பாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட 507 மக்கள் தொகை அடிப்படையிலான சர்வேக்களிலிருந்து பெறப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்திருக்கிறது. மற்றும் 2000 முதல், 2022 வரை உடல்சார் செயல்பாடின்மை மீது நிகழ் நிலைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளை இந்த ஆய்வு வழங்குகிறது. உலகளவில் உடல்சார் செயல்பாடு குறைவாக உள்ள போக்கு குறித்து உலகெங்கும் பிராந்திய அளவிலான விகிதங்களை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
அதிக வருவாய் உள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் (48%) மற்றும் தெற்காசியாவில் (45.1%) என இது கணிசமாக காணப்படுகிறது. உலகளவில் ஆண்களுடன் (28.7%) ஒப்பிடுகையில், பெண்களில் உடல்சார் செயல்பாடின்மை அதிகமாக (33.8%) இருக்கிறது. தெற்கு ஆசியாவில் தான் ஆண், பெண் ஆகிய பாலினங்களுக்கிடையில், மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. ஆண்களில் காணப்படும் 38.4%ஐ விட 14% அதிகமாக பெண்களில் 52.6% ஆக உடல்சார் செயல்பாடின்மை இருக்கிறது.
எம்.டி.ஆர்.எஃப் பற்றி:
மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) என்பது இந்தியாவில் சென்னையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய சிக்கல்கள் குறித்து அறிவியல் ரீதியான ஆராய்ச்சியை நடத்துவதற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை 1996-இல் இந்தியாவின் முன்னணி நீரிழிவு மருத்துவரான டாக்டர் வி. மோகனால் நிறுவப்பட்டது.
எம்.டி.ஆர்.எஃப்–இன் முதன்மை கவனமானது நீரிழிவு நோயின் காரணங்கள், தடுப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதிலும், அதனுடன் தொடர்புடைய சிக்கல்களைப் புரிந்துகொள்வதிலும் உள்ளது. MDRF–-இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி நீரிழிவு நோயின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இதில் தொற்றுநோயியல், மரபியல், மருத்துவ மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவை அடங்கும்.
நீரிழிவு நோயைப் பற்றிய அறிவை முன்னேற்றுவதிலும், நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துவதிலும், இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் நீரிழிவு நோயின் வளர்ந்து வரும் சுமையை எதிர்த்துப் போராடுவதிலும் MDRF முக்கிய பங்கு வகிக்கிறது.