செய்திகள்

இந்தியாவிலேயே தொழில் துவங்க அதிக கடன் கொடுத்த மாநிலம் தமிழகம்

ஒரே ஆண்டில் ரூ.60,674 கோடி முதலீடு; 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவிலேயே தொழில் துவங்க அதிக கடன் கொடுத்த மாநிலம் தமிழகம்

சட்டசபையில் எடப்பாடி பேச்சு

சென்னை, பிப்.6

இந்தியாவிலேயே தொழில் துவங்க அதிக கடன் கொடுத்த மாநிலம் தமிழகம் தான் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் 2011 முதல் 2021 வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 14,489 புதிய பேருந்துகள் 3,321.62 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டு பொதுமக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காலக்கட்டத்தில் 1,532 புதிய வழித்தடங்களும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, 914.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலியில் 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட 225 மில்லியன் லிட்டர் அளவிற்கு புதிய நீராதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக தமிழ்நாட்டில் ஒரு தொழிற்புரட்சியே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு 2015 ல் பல்வேறு துறைகள் சார்பாக கையெழுத்திடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயாகும். இதன் மூலம் 4,70,065 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் 72 சதவிகித திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் 73,711 கோடி ரூபாய் முத லீடுகளும், 1,86,838 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சாதனை

இந்த வரலாற்று சாதனையைத் தொடர்ந்து, இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ன் போது, 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 10 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில் 24,492 கோடி ரூபாய் முதலீட்டில் 1,10,844 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்துள்ள 81 திட்டங்கள், அதாவது 27 சதவீதத் திட்டங்கள், ஒரே ஆண்டில் தமது வணிக உற்பத்தியை துவங்கி சாதனை படைத்துள்ளன. மேலும் 2.20 லட்சம் கோடி முதலீட்டில் 5.33 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களின் ரூபாய் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை, தமிழ்நாட்டுக்கு ஈர்த்து, 35,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளை பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன் வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவும், ‘‘யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை கடந்த சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். அதனை, நானே நேரடியாகச் சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன்.

அம்மாவின் அரசு முனைப்போடு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக, மும்பையைச் சார்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே” என்ற நிறுவனம், கோவிட் காலத்திலும், புதிய முதலீட்டினை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தினை பெற்றுள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டு இருக்கிறது.

நடப்பு ஆண்டில் மட்டும் 60,674 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தக் கொரோனா காலத்தில் பெற்று கையெழுத்திடப்பட்டு சாதனைப் படைத்த அரசு அம்மாவின் அரசு.

மேலும், டி.எல்.எப். நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் முதலீட்டிலான தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம், 1500 கோடி ரூபாய் முதலீட்டில் அசன்டாஸ் ரேடியல் ஐ.டி. பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் பட்டாபிராம் டைடல் பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி பூங்காவில் நவீன ஏரோஹப் திட்டம் என பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

எனது தலைமையிலான உயர்நிலைக் குழு, ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, 39,941 கோடி ரூபாய் முதலீட்டிலான 62 பெரும் தொழில் திட்டங்களை, நானே நேரடியாக ஆய்வு செய்ததன் பயனாக, உடனுக்குடன் அவற்றுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில் முனைவோர்களுக்கு 11,539.61 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தொழில் முனைவோருக்கு அதிக அளவில் கடன் உதவி அளித்த மாநிலம் தமிழ்நாடுதான்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *