செய்திகள்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை, ஜூலை 10-

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அமெரிக்காவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் கடந்த ஜூன் மாதம் வரை ரூ.136.25 பில்லியன் செலவில், 14 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விரிவான சுகாதார பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு, கைகள் என மொத்தம் 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த 200 உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி பயனாளிகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. மருத்துவ சேவைகள் மலிவாக கிடைக்கக்கூடிய, அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *