எல்–நினோ, ல–நினாவால் ஏற்படும் அதி கனமழையை சமாளிக்க ஒன்றிய அரசுக்கு சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
டெல்லி, டிச. 01–
ஃபெஞ்சல் புயல் அதி கனமழையை கொட்டி தீர்த்து கரையை கடந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு காலநிலை மாதிரி தேவை என்பதை சூழலியல் ஆர்வலர் ஜி.சுந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான ஜி.சுந்தர்ராஜன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:–
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 24 மணி நேரத்தில் 50 செ.மீ மழை பதிவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதில் பெருமளவு மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்துள்ளது. இதனை முன்கூட்டியே கணித்து போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்காக இந்தியாவிற்கான சிறப்பு காலநிலை மாதிரி தேவை.
பெஞ்சல் புயலை ஏன் நம்மால் சரியாக கணிக்க முடியவில்லை? வெப்பமண்டல பகுதியின் உள்ள வானிலையை கணிப்பது கடினம். ஆனால் நமக்கான காலநிலை மாதிரிகள் இல்லாமல் போவதும் மிகப்பெரிய பிரச்சனையாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மாதிரிகளை வைத்து நாம் கணிப்பதுதான் பெரிய சவால். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க வேண்டுமென்று சொல்லி வருகிறோம்.
பாஜகவிடம் முயற்சி இல்லை
காங்கிரஸ் கட்சியின் சுற்றுச்சூழல் அமைச்சராக, ஜெயராம் ரமேஷ் இருந்த வேளையில், ரூ. 100 கோடியை ஒதுக்கி, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு (Indian institute of tropical meteorology) நிறுவனத்தை அமைத்திருக்கவிட்டால் இந்த அளவிற்கு கூட நாம் ஆய்வுகளை செய்திருக்க மாட்டோம். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்தியாவின் வானிலையை தீர்மானிப்பதில் எல்-நினோ, ல-நினா, கோள்களின் சுழற்சியால் ஏற்படும் ராஸ்பி (Rossby) அலைகள் போன்ற பல்வேறு உலகளாவிய நிகழ்வுகள் இருந்தாலும், இந்த பகுதியில் உள்ள சில சிறப்புவாய்ந்த நிகழ்வுகள் இந்தியாவின் வானிலையை தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்திய பெருங்கடல் இருமுனை, இந்த பகுதியில் உள்ள பெருங்கடலின் வெப்பம் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகள் தேவை என்று சொல்கிறோம். காலநிலை மாற்றம் கொண்டுவரக்கூடிய பேரிடர்கள் ஒருபக்கம் இருக்கும் நிலையில் இன்னொருபக்கம் ஒன்றிய அரசின் அறிவியல் தன்மையற்ற செயல்பாடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது கூறியுள்ளார்.