செய்திகள் போஸ்டர் செய்தி

இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்த ஐசிஎம்ஆர் அனுமதி

புதுடெல்லி, ஜூலை 3–

இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசி- மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும் உள்ளன.

அவ்வகையில் இந்தியாவின் முதல் தடுப்பூசியை புனேயை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது. கோவேக்சின் என்ற இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆமதாபாத்தில் உள்ள ‘ஸைடஸ் காடிலா’ என்ற மற்றொரு இந்திய நிறுவனம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதல்கட்ட சோதனை வெற்றியடைந்ததால், மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி 2 கட்டங்களாக பரிசோதனை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா – ஐரோப்பிய நிறுவனங்களின் தடுப்பூசி

கொரோனாவை விரட்டும் முயற்சியில் உலக நாடுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்காவின் பைசர் மற்றும் ஐரோப்பாவின் பயோ என்டெக் ஆகியவை இணைந்து தயாரித்த தடுப்பூசியை மனிதர்களுக்கு பரிசோதித்து பார்த்ததில் சிறந்த பலன் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் பழையபடி இயல்பு நிலைக்கு வரும் என்ற நிலை உள்ளது. பல கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளன. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஐரோப்பாவின் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோஎன்டெக் ஆகியவையும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின.

அந்த நிறுவனங்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மனித உடலில் செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட 18 வயது முதல் 35 வயது வரையிலான 45 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை. பாதுகாப்பானது என்பதும். மனிதர்களின் உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன. கொரோனா நோயால் பாதித்து குணமானவர்களைவிட, இந்த தடுப்பூசி போட்டவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கொரோனாவை காலி செய்யும் அமெரிக்காவின் இந்த தடுப்பூசி முக்கிய கட்டத்தை அடைந்திருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *