செய்திகள்

இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்

சிம்லா,மார்ச்.25–

நாட்டின் மிக மூத்த வாக்காளரான 102 வயது ஷியாம் சரண் நேகி, ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள கல்பா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய நேகி 1975 ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 102 வயதாகும் அவருக்கு மூன்று மகன்களும் ஐந்து மகள்களும் உள்ளனர். ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பது அவரது முக்கிய பொழுது போக்கு. நாட்டின் மிக மூத்த வாக்காளராக கருதப்படும் ஷியாம் சரண் நேகி 1951ல் நடந்த பொதுத் தேர்தலிலிருந்து ஓட்டு போட்டு வருகிறார். அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு உரிமையை பயன்படுத்தி வரும் நேகி விரைவில் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் ஓட்டு போடுவதற்கு உற்சாகமாக தயாராகி வருகிறார்.

கடந்த 2010ல் நடந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் போது அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, கல்பா கிராமத்திற்கு வந்து நேகியை கவுரவித்தார். இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச தேர்தல் ஆணையம் ஷியாம் சரண் நேகியை விளம்பர துாதுவராக நியமித்துள்ளது.

இதுகுறித்து ஷியாம் சரண் நேகி கூறியதாவது:

தேர்தலில் என் ஓட்டு உரிமையை முதலில் பதிவு செய்யவே விரும்புகிறேன். வாக்காளர்கள் குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்கள் தேர்தலில்போது நேரம் ஒதுக்கி நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *