செய்திகள் முழு தகவல் வாழ்வியல்

‘இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் வீரலட்சுமி’: தமிழ் நாட்டுக்கே தனிப் பெருமை!

* ‘தொடர் முயற்சிகளுக்குப்பின் எட்டிய மைல் கல்’ கணவர்

* ‘அம்மா லைட் எரியும் வண்டி ஓட்றா…’ 6 வயது மகன்

‘இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் வீரலட்சுமி’: தமிழ் நாட்டுக்கே தனிப் பெருமை!

பாக்சிங், சிலம்பாட்ட வீராங்கனையின் வெற்றிப் பயணம்

‘‘முயற்சிக்கு உறுதுணையாக இருப்பது வேகம் அன்று; விவேகம் தான்…

‘‘நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. முடியாதது முயலாதது மட்டுமே…!’’

என்ற வெற்றிச் சிந்தனை வரிகளுக்கு உதாரண புருஷியாகி இருக்கிறார், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்த வீரலட்சுமி என்னும் 30 வயது பெண்.

* இந்தியாவின் முதல் பெண் விமானி சர்ளா தக்ரால் (புதுடெல்லி)

* இந்தியாவின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவர் சுரேகா ஷங்கர் யாதவ் (சதாரா, மகாராஷ்ட்ரா)

* இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் வசந்த குமாரி (கன்னியாகுமரி)

ஆகியோர் பட்டியலில் இப்போது,

இந்தியாவில் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் என்னும் பட்டியலிலும், அந்தஸ்திலும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டுவிட்டார் வீரலட்சுமி.

‘‘ஜூன் மாதம், ஆம்புலன்ஸ் டிரைவராக என்னைப் பணியில் அமர்த்தும் நேரம் வரை எனக்குத் தெரியாது, நான் தான் இந்தியாவின் முதல் ஆம்புலன்ஸ் பெண் டிரைவராக இருப்பேன்’’ என்று. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பெருமிதத்தோடே சொல்கிறார் வீரலட்சுமி.

அணிந்திருக்கும் சல்வார் மேலாடை மீது அந்த வெள்ளைக் கோட்டை அணிந்தபடி, பளபளக்கும் கறுப்பு ஷூவுக்குள் தன் இரண்டு கால்களையும் திணித்தபடி, வலது கையால் ஆம்புலன்ஸ் வேனின் கதவை லாவகமாகத் திறந்து, இருக்கையில் ஜம்மென்று அமர்ந்து, சீட் பெல்ட்டை தோள்பட்டையின் குறுக்காக இழுத்து விட்டபடி புன்னகைத்தபடியே காமிராவுக்கு ‘போஸ்’ கொடுத்தபோது… பெயருக்கு ஏற்றாற் போல ‘வீர’ மங்கையாகத் தான் காட்சி அளித்தார் வீரலட்சுமி.

உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு ‘உய்ங்…உய்ங்…உய்ங்…’ என்று ஒலி எழுப்பிக் கொண்டே சாலைகளில் மின்னல் வேகத்தில் பறக்கும் ஆம்புலன்ஸ் வேன்களைப் பார்த்த்திருக்கிறோம். அந்த வேனின் ஒலியும், அதன் வேகமும் சாலைகளில் பார்ப்பவர்களுக்கு ‘ஒரு மாதிரி’ பதட்டத்தை ஏற்படுத்தும் நிலையில்… அந்த ஆம்புலன்ஸ் வேனை ஓட்டிச் செல்லும் முதல் பெண் டிரைவர் வீரலட்சுமி (அகில இந்திய அளவில்) என்பது எத்தனை பெருமைக்குரியது, மகிழ்ச்சிக்குரியது.

வீரலட்சுமி – மக்கள் குரலின் இன்றைய சிறப்பு விருந்தினர். தமிழகத்துக்கு தனிப்பெருமை சேர்ந்த்திருக்கும் உங்களுக்கு மக்கள்குரல் – டிரினிட்டி மிரர் குடும்பத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகள், வெற்றிகள் தொடரட்டும் என்று சொன்னபோது, நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கொரோனா நேரத்தில் இப்படி ஒரு வேலையா?

‘‘உயிர்க்கொல்லி கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேன் டிரைவராக, முன் களப்போராட்ட வீராங்கனையாக நான் பணியில் நியமனம் செய்யப்பட்டிருப்பது கண்டு முதலில் என் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்தார்கள். நான் தான் அவர்களுக்கு தைரியம் சொன்னேன். இதுவும் ஒரு வேலை. அதுவும் அரசாங்க வேலை. உயிர்க்காக்கும் மக்கள் சேவை வேலை. தைரியமாக அனுப்புங்கள் என்று குடும்பத்தாருக்கு எடுத்துச் சொன்னேன். அப்புறம் தான் அவர்கள் சமாதானம் அடைந்தார்கள்’’ என்று வீரலட்சுமி புன்னகைத்தபடியே கூறினார்.

பெண்களுக்கு டிரைவிங் பயிற்சி தந்தேன்…

‘‘நான் கேப் கார் டிரைவர். கால்டாக்சி ஓட்டுபவள். கார் ஓட்டுவதில் அனுபவம் பெற்றவள். அதனாலேயே பல இளம் பெண்களுக்கு டிரைவிங் பயிற்சி கொடுத்து வந்தேன். என் கணவரோடு சேர்ந்து நானும் காரை ஓட்ட ஆரம்பித்தேன். குடும்பத்தில் இருவரும் (கணவன் + மனைவி) சேர்ந்து வேலை செய்தால் குடும்பத்தை ஓரளவு நிம்மதியாக நடத்தலாம். பொருளாதார சுமை இருக்காது என்று நினைத்துத் தான் கார் ஓட்டும் தொழிலுக்கு வந்தேன். அப்படி வந்த பிறகு, இத்தொழிலில் அடி எடுத்து வைத்த வேலையில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற ஒரு ஆர்வத் துடிப்பும் உந்தித் தள்ளியது. அதன் பலன் தான் இன்று, உயிர்க்காக்கும் ஆம்புலன்ஸ் சர்வீஸ்சில் பெண் டிரைவராக நியமனம் ஆகியிருக்கிறேன்’’ என்றார் அவர்.

ஆட்டோமொபைல் என்ஜினியரிங் பட்டயம்

ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கில் பட்டயம் (டிப்ளமா) பெற்றவள். அதோடு ஹெவிவைக்கிள்ஸ் (கனரக வாகனங்கள்) ஓட்டுவதற்கான லைசென்சும் பெற்றிருக்கிறேன். ஆம்புலன்ஸ் டிரைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டதும், எனக்கு ஒரு வார காலத்துக்கு ஆம்புலன்ஸ் வேனில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் நாள் டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் உட்கார வைத்ததும், ஒரு கணம் பயந்து நடுங்கிவிட்டேன்.

பிறகு, டிரைவர் பணி எந்த அளவுக்கு கஷ்டமானது என்பதை உணர்ந்தேன். விபத்தில் சிக்கியவர்களை தூக்கி வேனில் ஏற்றி முதலுதவி கொடுத்து உதவிவிட்டு மீண்டும் வேனில் ஏறியபோது… ரத்தத் துளிகளைப் பார்த்தபோது நடுங்கிப் போனேன். அது கொஞ்ச நேரத்துக்குத் தான். முதல் அனுபவம் என்பதால் பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுவிட்டேன்’’ என்றும் சொன்னார் வீரலட்சுமி.

தொடர்ந்து அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

பயணம் நீண்டது பொறுப்பானது

* ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற அரசு நியமனம் தகவல் கிடைத்ததும் மனநிலை எப்படி?

‘‘ஆம்புலன்ஸ் டிரைவர் பணி ஆணை கிடைத்த தருணம் மிகவும் மகிழ்ச்சியானது.. தொடர் முயற்சிகளுக்கு பின் எட்டிய மைல்கல்… பயணம் நீண்டது. மிக பொறுப்பானது, தயார் நிலையில் இருக்க வேண்டும்.. என்ற எண்ணம் மனதில் தோன்றியது’’.

* கணவர் என்ன சொன்னார்? மகன் மகள் என்ன சொன்னார்கள்?

‘‘கணவர் சொன்னது.. மகிழ்ச்சி பொறுப்பு உணர்ந்து சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.என் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி. என் அம்மா லைட் எரியும் வண்டி ஓட்டுகிறார்..என் மகன் சொன்னது’’.

* முன்பு கால் டாக்சி டிரைவர் ஆனால் இப்போது ஆம்புலன்ஸ் டிரைவர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்…?

‘‘கால் டாக்ஸி ஓட்டுநர் பணியும் சவாலானது தான். பணியின் போது கிடைத்த அனுபவங்கள் திறமை மேன்படுத்த உதவின. ஆம்புலன்ஸ் டிரைவர் மிகவும் பொறுப்புகள் நிறைந்த பணி கூடுவதால் சவால்களுக்கு தயாராக வேண்டும்’’.

என் நண்பர்களுக்கு மகிழ்ச்சி..சில பெண் ஓட்டுநர்கள் தாங்களும் சேர விரும்புவதாக சொன்னார்கள் எதிர்பார்த்தது இது தான், மாற்றம் வர வேண்டும் என்று.

வீரப்பெண்: மைக் அறிவிப்பில் சிலிர்த்துப் போனேன்

* முதல்வரும், மற்ற அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் என்ன சொன்னார்கள். உங்களுடைய உணர்வுகள் எப்படி?

‘‘தலைமை செயலகத்திற்கு செல்லும் பயணிகளை ட்ராப் பண்ண போயிருக்கேன் கால் டாக்ஸி என்பதால் வெளிய மட்டுமே அனுமதி கிடைக்கும்.முதல் முறை உள்ளே சென்றதே மகிழ்ச்சியாக இருந்தது. நான் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் முன்னிலையில் வாகனம் இயக்கும்போது என் பெயரைச் சொல்லி ‘‘ஒரு பெண் வீரத்தின் உதாரணமாக வாகனத்தை இயக்குகிறார்’’ என்று மைக்கில் சொன்னார்கள்.. மிகவும் மகிழ்வான தருணம். சிலிர்த்துப் போனேன்.

ஆசிரியர் ரமேஷ்குமார் முதல் வாழ்த்து

* முதல் வாழ்த்து யாரிடமிருந்து?

முதல் வாழ்த்து என் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து வந்தது. குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் கனரக வாகன பயிற்சிஆசிரியர் ரமேஷ் குமார். அவரிடம் நிறைய கேள்விகள் கேப்பேன்… தேர்வு செய்த துறையில் சாதிக்க வாய்ப்பு இருக்கா எனக்கு? இது சரியாக வருமா என்று.. அவர் சொன்னது எல்லா கேள்விகளுக்கும் ஒரே நாளில் விடை கிடைக்காது உங்களுக்கு வேலை இருக்கு இப்ப. கனரகம் வாகனம் இயக்கும் வரை வந்துள்ளீர்கள். தொடர் முயற்சி உழைப்பைத் தொடருங்கள் என்றார். டிவியில் பார்த்து விட்டு போன் செய்து, என்னமோ, உன் கேள்விகளுக்கு விடை கிடைத்ததா என்றார்… மகிழ்ச்சியான தருணம்.. ப்ரொபெஷனல் டிரைவர் ட்ரைனிங் அகாடமி கார் மற்றும் பஸ் ஓட்ட பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி.

* முதல் அனுபவம்…

முதல் முறை யூனிபார்ம் போட்டு ஆயுத்தம் ஆகும் போது சிறிது பதட்டம் இருந்தது.. வாகனம் சிறிது தூரம் சென்றது கவனம் முழுவதும் வாகனதின் மீது இருந்ததால்.. சுலபமாக கடந்து விட்டது அந்த நிமிடங்கள்

திக்… திக்… மனசில் பதட்டம்

* ஆம்புலன்ஸ் வண்டி வந்தாலே திக் திக்குன்னு மனசுக்குள்ள ஒரு பதட்டம் வரும். அதை மீறி எப்படி இந்தப் பதவிக்கு ஓகே சொல்ல முடிந்தது?

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது என் தந்தை உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.. தனி ஆளாக நின்று என்னையும் என் தம்பியையும் தையல் வேலை செய்து என் அம்மா வளர்த்தார்.. நான் தைரியமாக வளர என் அம்மாவே காரணம். பள்ளியில் படிக்கும் போது பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் தங்க பதக்கம் வாங்கி உள்ளளேன். மிகவும் கஷ்டப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் கட்டி உள்ளார்.. நான் செய்வதெல்லாம் விட என் அம்மாவின் உழைப்பே மிகவும் உயர்ந்தது வீரலட்சுமியிடமிருந்து விடை பெற்றோம்.

வெற்றியை எட்டும்

நோக்கம் இருந்தால்…

ஒற்றைச் சிறகிலும்

பறக்கலாம்;

‘உன்னைத் தொற்றிய

சோம்பலைத் தூக்கி எறிந்தால்..

தோள்களில் பூமியை நிறுத்தலாம்!

கவிஞர் தாரா பாரதியின் நம்பிக்கை வரிகள் நினைவுக்கு வந்தன, வீரலட்சுமியின் விவேகத்தைக் கண் எதிரில் கண்ட பொழுதில்!

கண் கொட்டாமல் ரசித்த 6 வயது மகன்

118 ஆம்புலன்ஸ்களை முதல்வர் இயக்கி வைத்த நிகழ்ச்சிக்கு வீரலட்சுமியின் 6 வயது மகனும் உடன் சென்றிருக்கிறேன். வரிசை வரிசையாய் நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் வேன்கள், முதல்வர் கொடி அசைத்து வைத்த நிகழ்ச்சியையும், அம்மா வீரலட்சுமி ஒரு வேனில் ஏறுவதையும் கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தான். இதே போல 10 வயது மகளும் தம்பியோடு வந்திருந்து நிகழ்ச்சியைப் பார்த்தாள். அவர்கள் கண் எதிரில் ஆம்புலன்ஸ் வேனில் பெண் டிரைவராக ஏறி அமர்ந்து ஓட்டியது, அவருக்குள், புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதை அவர் கிட்டேயிருந்து பார்த்தபோது அது அவர் கண்களில் தெரிந்தது.

‘ஆண்டவனே.. காப்பாத்து’

‘‘டாக்சி ஓட்டும்போது விமான நிலையங்களுக்கும், ரெயில் நிலையங்களுக்கும் பயணிகளை அழைத்துச் செல்வேன். அப்போதெல்லாம் என்னை நம்பி வந்தவர்கள், வண்டியைத் தவறி விட்டுடக்கூடாது என்று நினைப்பேன். இப்போது ஆம்புலன்ஸ் சேவைக்கு மாறி இருக்கிறேன். என்னை நம்பி பயணிப்பவர்கள் வாழ்வை தவற விட்டுடக் கூடாது என்பதற்கான பிரார்த்தனைகளையும் சுமந்து கொண்டு பயணிக்கிறேன்.

எழுத்து, தொகுப்பு: வீ.ராம்ஜீ

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *