செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் வலுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, ஜன.29-

இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் வலுப்படுத்தியுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த பவளவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

சுப்ரீம் கோர்ட் பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-–

3 புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், இந்தியாவின் சட்டம், காவல் மற்றும் விசாரணை அமைப்புகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளன.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சட்டங்களில் இருந்து புதிய சட்டங்களுக்கு மாறுவது சீராக இருப்பதை உறுதி செய்வது முக்கியம். இது தொடர்பாக, அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம்.

அதிகாரம் பெற்ற நீதித்துறை அமைப்பு வளர்ந்த இந்தியாவின் ஒரு பகுதியாகும். நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திசையின் ஒரு படிதான் ஜன் விஸ்வாஸ் மசோதா. எதிர்காலத்தில், இது நீதித்துறையின் தேவையற்ற சுமையை குறைக்கும்.

சுப்ரீம் கோர்ட் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும் சமூக, அரசியல் சூழலுக்கு புதிய திசையை வழங்கியுள்ள தனிமனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றில் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

நாட்டின் இன்றைய பொருளாதார கொள்கைகள் நாளைய ஒளிமயமான இந்தியாவின் அடித்தளமாக அமையும். இன்று இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் நாளைய ஒளிமயமான இந்தியாவை மேலும் வலுப்படுத்தும்.

இன்று இயற்றப்படும் சட்டங்கள் இந்தியாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். உலக அளவில் மாற்றங்கள் நிகழும் நிலையில், உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவில் வலுப்பெற்று வருவதால், உலகின் பார்வை இந்தியாவையே நோக்கியுள்ளது. இதுபோன்ற சமயங்களில், இந்தியா தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வது முக்கியம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பேசும்போது கூறியதாவது:-

காணொலி விசாரணைகளில் உலக அளவில் சுப்ரீம் கோர்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 3 கோடி வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டன. இதில் சுப்ரீம் கோர்ட் மட்டுமே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்கு களை விசாரித்தது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் சுப்ரீம் கோர்ட்டுகள் தங்கள் தீர்ப்புகளை வழங்கும்போது இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளைக் குறிப்பிடுகின்றன. முழு அரசாங்க அணுகுமுறையின் மூலம், நீதித்துறையின் ஒத்துழைப்போடு, ஒரு சிறந்த நீதி சூழலை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இவ்வாறு அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார்.

இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *