தலையங்கம்
இந்திய செஸ் வரலாற்றில் சிறப்புமிக்க சாதனையாக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இது இந்திய செஸ் வரலாற்றில் புதிய பரிமானத்தை உருவாக்கி உள்ளது, நவயுக இளைஞர்கள் வரும் நாட்களில் அசைக்க முடியா வல்லமையை நிலைநாட்டுவர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச செஸ் பெடரேஷனால் (FIDE) நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்திய ஆடவர் அணி குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோரின் மாபெரும் ஆட்டத்தால் தொடக்கத்தில் முதல் சுற்று வரை தொடர்ந்து வெற்றிகளை குவித்தது.
8 சுற்றுகளை வெற்றி பெற்ற பிறகு 9-வது சுற்று டிராவில் முடிந்தது. ஆனால் 10-வது சுற்றின் முடிவில் 19 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியா அணியுடன் சமநிலையில் இருந்து, இந்தியா தங்கத்தை உறுதி செய்தது.அணிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன் கேப்டனாக இருந்தார்.
அதே நேரத்தில் இந்திய மகளிர் அணியும் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டு தங்களின் திறமையை நிரூபித்தது. ஹரிக்கா, திவ்யா, வைஷாலி உள்ளிட்ட வீராங்கனைகள் அஜர்பைஜான் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணிக்கும் தங்கம் கிடைக்கச் செய்தனர்.11 சுற்றுகளில் 9 சுற்றுகளை இந்திய மகளிர் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
போலந்து அணிக்கு எதிராக தோல்வியும் அமெரிக்காவுடன் டிராவும் செய்திருந்தது இந்தியா. இது இந்திய செஸ் வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாகும்.
இந்திய அணிகள் உலகத்தர அணிகளுடன் போட்டியிட்டு தங்கள் மனோபலம், திறமை மற்றும் அனுபவத்தின் மூலம் தங்கத்தை வென்றுள்ளனர். 2014-ல் செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இந்தியா வெண்கலம் வென்றது, 2022-ல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஒலிம்பியாடில் இந்தியாவின் இரண்டாவது அணி வெண்கலம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி இந்திய செஸ் உலகின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. முன்னோடிகளான விசுவநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா போன்ற மாபெரும் செஸ் விளையாட்டாளர்கள் தொடங்கிய இந்தப் பயணம், இளம் வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி போன்றோரால் ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் மிக அசத்தலாக விளையாடி 10 ஆட்டங்களில் 9 புள்ளிகளைப் பெற்றார் மற்றும் முதல் போர்டில் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசியும் சிறப்பாக ஆடி, 11 ஆட்டங்களில் 10 புள்ளிகளைப் பெற்று போர்டு 3-இல் தனிநபர் தங்கத்தை வென்றார். இருவரும் தங்கள் FIDE மதிப்பீடுகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளனர். இந்த மதிப்பீடுகள் படி, உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அர்ஜுன் எரிகைசி. முதல் இடத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், இரண்டாம் இடத்தில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா உள்ளனர். சதுரங்கத்தில் FIDE மதிப்பீடுகளில் 2800-க்கும் அதிகமான புள்ளிகள் பெற்றிருந்தால் அவர்கள் உலகின் சிறந்த ஆட்டக்காரர்களாக கருதப்படுவர். அந்த வகையில் அர்ஜுன் 2800 புள்ளிகளை பெறுவதற்கு மிக நெருக்கமாக உள்ளார். குகேஷ் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.இந்த சாதனை, இந்தியாவின் செஸ் வீரர்கள் உலக அளவில் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.