செய்திகள்

இந்தியாவின் கடன் 67 ஆண்டுகளில் ரூ.56 லட்சம் கோடி

8 ஆண்டில் மட்டும் ரூ. 83 லட்சம் கோடி உயர்ந்து

ரூ.139 லட்சம் கோடியானது: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி, ஜூலை 14–

இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் கடன் 139 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில் கூறி இருப்பதாவது:–

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உள்ள நிலைமையும், தற்போது உள்ள நிலைமையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா விடுதலை பெற்றதில் இருந்து, 2014-ம் ஆண்டு வரை 67 ஆண்டுகளில் நாட்டின் மொத்த கடன் ரூ.56 லட்சம் கோடியாக இருந்ததாகவும், தற்போது 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.83 லட்சம் கோடி அதிகரித்து, தற்போது ரூ.139 லட்சம் கோடியாக இந்திய அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கர்வமே காரணம்

இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கு மீதான கடன் 2014-ம் ஆண்டு 44,348 ரூபாயாக இருந்ததாகவும், தற்போது அது ரூ.1,01,048 (ஒரு லட்சத்து ஆயிரத்து நாற்பத்து எட்டு) ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2014-ம் ஆண்டு வேலைவாய்ப்பின்மை 4.7 சதவீதமாகவும், தற்போது 7.8 சதவீதமாகவும் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, 410 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை, தற்போது ரூ.1053 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், அப்போதைய டாலருக்கு இருந்த மதிப்பு 59 ரூபாயாக இருந்ததாகவும், ஆனால் தற்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 135 பில்லியனாக இருந்த ஏற்றுமதி – இறக்குமதி இடையேயான வர்த்தக பற்றாக்குறை, தற்போது 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார வளர்ச்சியின் பெரும் பின்னடைவுக்கு ஆட்சியாளர்களின் கர்வமே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.