நாடும் நடப்பும்: ஆர். முத்துக்குமார்
ரிக்வேதம் கூறும் சமூகப் பொருளாதாரம், ‘ஓ வறுமையே, அழகில்லாத மற்றும் எப்போதும் தொந்தரவு தரும் வறுமையே! தொலைதூர மலையேறி விடு! இல்லை என்றால் உன்னை எழுச்சி கொண்ட சக்தியுடன் அழிக்க நேரிடலாம்!’ [ரிக்வேதம்-10,155,1] ,
அதாவது வெறும் கனவு காணாமல், உரிய முயற்சிகளுடன் கடின உழைப்பின் உதவியால் முன்னேற்றம் காண வேண்டும் என்ற கருத்தை மறைமுகமாக சொல்லுகிறது..
இந்தியாவில் வறுமை ஒரு பெரிய சவாலாக உள்ளது.
2021-ல் இந்தியாவில் 9.2% மக்கள் 1.90 டாலர் (PPP) க்கும் குறைவான தினசரி வருமானத்துடன் வாழ்ந்தனர் என்று உலக வங்கியின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
வறுமை ஒழிப்பு என்பது ஒரு சிக்கலான பிரச்சினை மற்றும் இதற்கு எளிதான தீர்வு எதுவும் இல்லை. இருப்பினும் பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம்
வணிகம் மற்றும் சமூக பாதுகாப்பு வலைகள் அவசியம் தேவைப்படும் ஆயதங்களாக இருக்கிறது.
வறுமையில் வாழும் குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கலாம் அல்லது குறைந்த பள்ளிப் படிப்பு மட்டுமே பெற முடிகிறது. இது அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை பாதிக்கிறது ; வறுமை வட்டத்தில் சிக்கிக்கொள்ள வழிவகுக்கும் பல நேரங்களில் அவர்களை தவறான வழிகளில் பயணிக்க வைக்கிறது,
வறுமையில் வாழும் மக்கள் சமூகத்தில் இருந்து விலக்கப்படலாம் ;பாகுபாட்டிற்கு ஆளாகலாம். இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
லாபத்தின் முக்கியத்துவம்
வணிகம் மற்றும் லாபம் என்பது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான அடித்தளம். லாபம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. டாடா, அம்பானிகள், அதானி, மகிந்திராஸ் போன்ற இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் எப்படி நாட்டு முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்பதற்கு புதிய பாதை அமைத்தாக வேண்டும்.
இந்திய வம்சாவளியினரின் சிறப்பு
அவர்களும் மத்திய அரசும் உற்று கவனிக்க வேண்டிய ஒரு அம்சம்:
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் சராசரி வருமானம் சாதாரண அமெரிக்கரின் வருமானத்தை விட இரு மடங்கு அதிகம். இது இந்திய சமூகத்தின் திறமை மற்றும் திறனை வெளிப்படுத்துகிறது.
2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இந்திய-அமெரிக்கர்களின் தனிநபர் வருமானம் 1,10,026 டாலராக இருந்தது. அப்போது அமெரிக்கர்களின் தனிநபர் வருமானம் 61,349 டாலர்கள் மட்டுமே!
அந்நிய செலாவணி வரத்து
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் $120 பில்லியன் அனுப்பி, சீனாவை விட இரு மடங்கு அதிகமாக உள்ளனர். இந்த வருமானம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துகிறது. குடும்ப வருமானத்தை மேம்படுத்துகிறது ; நாட்டின் வெளிநாட்டு செலவின கையிருப்புகளை அதிகரிக்கிறது.
இந்தியாவின் முக்கிய பொருளாதார மண்டலங்கள் அதாவது SEZs, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 21% பங்கு பெறுகின்றன மற்றும் 17.11 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இவர்களையும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் போன்று உயர் வருவாய் ஈடுபவர்களாய் மாற்ற என்ன செய்ய வேண்டும்? நமது கோடீஸ்வரர்கள் சிந்தித்து செயல்பட இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்:
ஊதிய உயர்வு:
திறமைகளை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்திய நிறுவனங்கள் போட்டித் தரமாக ஊதியம் வழங்க வேண்டும்.
திறன் மேம்பாடு:
இந்தியாவின் பன்முகத்திறனையும் வேகத்தையும் பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களைத் தழுவ வேண்டும்.
வரி செலுத்தலில் மகிழ்வு:
மத்திய வரி கொள்கைகள் நிறுவனத் திட்டங்களுடன் ஒத்துழைத்து வளர்ச்சி , புதிய முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.
இந்தியர்களின் திறனுக்கு ஏற்ற ஊதிய நிர்ணயிப்பு பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் திறன் அதிகரிப்பதை பார்க்கலாம். தனியார் துறை மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தியா
வல்லரசாக முன்னேற்றம் காண முடியும். அதுவே இந்தியர்களுக்கு வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும்.