சினிமா செய்திகள்

இயக்குனர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை, ஏப்.1:

இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 19-ம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குனர், சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சந்திரன், மது ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக ரூ.1 கோடி அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ.1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில், ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். எங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், ரூ.236 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்.

இயக்குனர் ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ.14 கோடி கொடுத்துள்ளோம். எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அவர் பிற படங்களை இயக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் மனு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *