சென்னை, ஜூலை 11–
நடிகர் கமல்ஹாசன் நடித்து நாளை திரைக்கு வரவுள்ள ‘இந்தியன்–2’ திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12–ந்தேதி) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக ஒரு திரையில் 5 காட்சிகள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம் ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, கஸ்தூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.
இதன் அடுத்த பாகம் 28 ஆண்டு கழித்து ‘இந்தியன் 2’ என்ற பெயரில் லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் நாளை (12ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்தியன் – 2 சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை ஏற்று தற்போது ‘இந்தியன்–2’ திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12–ந்தேதி) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி இந்தியன்–2 திரைப்படம் வெளியாகும் நாளான நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை 12-ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் 13-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கடைசி காட்சியை முடித்துவிட வேண்டும். ஒரு திரையில் அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி. உரிய போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி ஒளிபரப்புவதற்கு இடையே சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற போதிய நேரம் ஒதுக்கவும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.