செய்திகள்

இத்தாலியில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி

ரோம், மே.12–

இத்தாலியில் இளம்பெண் ஒருவருக்கு, ஒரே நேரத்தில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் டஸ்கனி பகுதியில், 23 வயதான இளம்பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வந்தது. பணியில் இருந்த நர்ஸ் ஒருவர், ஒரு குப்பியில் இருந்த 6 டோஸ் மருந்து முழுவதையும் கவனக் குறைவாக ஒரே ஊசியில் ஏற்றி, அதனை அந்தப் பெண்ணிற்குச் செலுத்தினார்.

இதன் பின்னரே, அந்த செவிலியருக்கு தான் தவறு செய்தது தெரியவந்தது. இதனையறிந்த மருத்துவர்கள், தீவிர ஆலோசனை நடத்தி, அந்தப் பெண்ணைக் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதில், அந்தப் பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘அதிகளவு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட அந்த இளம்பெண், உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இந்த பிரச்னை தவறுதலாக நடந்து விட்டது. வேண்டுமென்று நடக்கவில்லை. ஏதேனும் அசவுகர்யம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுகும்படி அந்தப் பெண் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *