“உங்கள இப்படிப் பேசியிருக்கக் கூடாது தங்கப்பாண்டி. அதுவும் நடுரோட்டுல வச்சு, எல்லாரும் உங்களையே வேடிக்கை பாத்துட்டு போனாங்க. குப்புசாமி கூட உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் அப்படி உங்களைத் திட்டிக்கிட்டு இருந்தார் ? என்று ரவி கேட்க
” என்னையவா குப்புசாமி திட்டுனார் இல்லையே? “
என்று குழம்பிப் போய் கேட்டான் தங்கப்பாண்டி.
” அதாங்க நேத்து உங்கள ரோட்ல வச்சு திட்டிகிட்டு இருந்தாரே குப்புசாமி அதத்தான் சொல்றேன்?”
என்று ரவி மறுபடியும் சொல்ல “இல்ல அவர் என்னத் திட்டலயே ?”
என்று தங்கப்பாண்டி யோசித்துச் சொன்னான்.
” ஏங்க நீங்க இப்பிடி சொல்லுவீங்கன்னு தான் அதை நான் வீடியோவா எடுத்து வச்சிருக்கேன் பாருங்க”
என்று தன் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவைக் காட்டினான் ரவி.
” ஓ… இதுவா ! “
என்று அந்த வீடியோவைப் பார்த்த தங்கப்பாண்டி கடகடவெனச் சிரித்தான்.
” இது உண்மை தானே ? இதப் பாத்துட்டு ஏன் இவ்வளவு சிரிக்கிறீங்க ? “
என்று ரவி சொல்ல
“இத நினைச்சு நான் சிரிக்காம, வேற என்ன பண்றது ? குப்புசாமி ஒரு மாதிரியான ஆளு தான். அவர் கூட பேசுனா இந்த மாதிரி தான் ஏதாவது பிரச்சினை வந்து சேருது .நான் எத்தனையோ தடவை சொல்லி பாத்துட்டேன். ஆனா அந்த ஆளு கேக்குற மாதிரி இல்ல .ஆனா இன்னைக்கு பிரச்சனை எப்படி வந்து நிக்குது பாருங்க”
என்று தங்கப்பாண்டி ரவியிடம் விளக்கினான் .
” என்ன தங்கப்பாண்டி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நீங்க ஏதேதோ பேசிட்டு இருக்கீங்களே ?”
என்று ரவி சொல்ல
” ஐயா … ரவி… குப்புசாமி என்னையத் திட்டல .அவரு வேற ஒருத்தர திட்டிப் பேசிட்டு இருந்தாரு. அவன் பணம் குடுக்கல போல. அவனத் தான் என்கிட்டச் சொல்லித் திட்டிக்கிட்டு இருந்தாரு.அவங்க நல்லா இருக்க மாட்டான். எனக்கு துரோகம் பண்ணிட்டான். அவன் நிலைமை இன்னும் மோசமாகும். இப்பிடி நிறைய வார்த்தைகள் எல்லாம் என்கிட்ட பேசினார். அவனைப் பத்தித் திட்டுனத என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தார்.அது என் முகத்துக்கு நேரா கைய நீட்டி நீட்டிப் பேசிட்டு இருந்தார்.அது அவருடைய சுபாவம். அவர் யாரையோ திட்டுறது .மத்தவங்க பாக்கும் போது என்னையத் திட்டுற மாதிரி தெரிஞ்சிருக்கு. அவர் கையை நீட்டி நீட்டி என் முகத்துக்கு முன்னாடி பேசும்போது எனக்கே பயமா இருந்துச்சு. ரோட்ல போறவங்க எல்லாம் எனக்கும் குப்புசாமிக்கும் ஏதோ சண்டைன்னு தான் நினைச்சிருப்பாங்க .ஆனா, குப்புசாமி இன்னொரு ஆளத் தான் பேசிக்கிட்டு இருக்காருன்னு உங்களுக்கு புரியல. அத வீடியோவா எடுத்துட்டு வந்து, ஆதாரமா என்கிட்டயே காட்டுறீங்க. “
என்று தங்கப்பாண்டி சொல்ல,
” ச்சே… இது வேற மாதிரியா ? நான் கூட அவர் உன்னைய தான் திட்டிக்கிட்டு இருக்காருன்னு நினைச்சிட்டு இருந்தேன். இனிமே அவர்கிட்ட பேசும் போது எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னே பேசு.. இல்ல.. பாக்குறவன், உன்னைய தப்பா நினைக்கப் போறான்”
என்று ரவி தங்கப்பாண்டியிடம் சொல்ல,
” ம்… ஆமா ரவி. நீ சொல்றது சரி தான். இனிமே அந்த ஆளு கூடப் பேசுனா கொஞ்சம் தள்ளி நின்னு பேசுறது தான் நமக்கு மரியாதை. இல்ல போன்ல பேசலாம்னு சொல்லிட்டுப் போயிரணும் “
என்று தங்கப்பாண்டி சொல்லி முடிப்பதற்குள்
குப்புசாமி, யாரோ ஒருவரிடம் முகத்துக்கு நேராக கையை நீட்டி, நீட்டி அவரைத் திட்டுவது போலவே பேசிக் கொண்டிருந்தார்.
“ஆமா கரெக்ட்… நீங்க சொல்றது சரி… அது உண்மைதான் “
என்று தலையை ஆட்டிக் கொண்டும் சின்னச் சின்ன வார்த்தை மட்டும் பேசிக் கொண்டிருந்தார், அவருடன் நின்று கொண்டிருந்தவர்.
இதைப் பார்த்த தங்கப்பாண்டிக்கும் ரவிக்கும் அடக்க முடியாத சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு இருவரும் ஓடினர்.