சிறுகதை

இது தப்புன்னா அதுவும் தப்புதான் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

ஏன் மாமா வீட்டுக்கு போக மாட்டேன்றே. சொல்லுடா” அம்மா கேபமாகக் கேட்டாள்.
“பிடிக்கலை”.
“இப்படி பிடிக்கலைனு ஒத்தை வார்த்தயில் சொன்னா எப்படிடா? என்ன பிடிக்கலை உனக்கு அங்கே? எதனால் பிடிக்கலை?
இப்பத்தான் எல்லா கிராமங்களிலும் டி.வி. இன்டெர்னெட் வசதியெல்லாம் இருக்கே. செல்லை கையில் எடுத்துக்கிட்டு போ. அப்பப்ப எங்ககிட்டல்லாம் பேசு. ஜாலியாய் லீவை கழி அங்கே.
கோவில் திருவிழாலாம் பார்க்கலாம். நல்ல சுத்தமான தண்ணீர், நல்ல காத்தை சுவாசிக்கலாம்” என்ற என்ற அப்பாவை மடக்கி
“ஆனா … ஆனா .. சே.. என்னப்பா சொன்னீங்க? கிராமத்து
மக்கள்ளாம் வெள்ளந்தியானவங்கனு. இருக்கலாம். ஆனா அங்கேயும் சிலர். வேண்டாம். என் ரணத்தை கிளறாதீங்க.
எனக்கு மாமா வீட்டுக்கு போக விருப்பம் இல்லை’’.
“மாமா கேட்டா என்ன பதிலை சொல்றதுடா?”
“அவன் வர பிரியப்படலைனு சொல்லு. அவர் புரிஞ்சுப்பார்.”
“அப்படி என்னடா உனக்கும் மாமாவுக்கும் சண்டை?” அம்மா கேட்டாள்.
“சண்டையெல்லாம் எதுவும் இல்லை. நான் பெரியவங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறவன்னு உங்களுக்கு தெரியும். அனாவசியமாய் ஒரு வார்த்தை பேச மாட்டேன்னும் தெரியும். ஆனா…. அதான் வேணாம்னு சொல்றேனே.. விடு. ”
அப்போது குறுக்கிட்ட என் தம்பி அப்பாவிடம் சொன்னான். “இவன் ஏன் மாமா வீட்டுக்கு வர மாட்டேன்றான் தெரியுமா? இவன் மாமா வீட்டுக்கு வந்தா மாமா இவனை திட்டுவார் ஏண்டா
இப்படி போட்டுக் கொடுத்தே அப்பாகிட்டனு . அதானே அண்ணா?”
“அதெல்லாம் எதுவுமில்லை” என்றேன்.
“ஆமாம்டா கண்ணா.. இப்பத்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது.. போன முறை நான் மாமா வீட்டுக்கு போனப்ப அவர் கிட்ட அப்படி சொல்லியிருக்க கூடாதுதான்” என்றாள் அம்மா.
“அப்படி என்ன சொன்னே உன் அண்ணன்கிட்ட” என்ற அப்பாவிடம் அம்மா “என்னை மன்னிச்சுருங்க.. உங்க அண்ணன் நம்ம வீட்டோட வந்துட்டார்ல.. சரியான கால்கட்டுனும்
ஒரு இடம் போக வர முடியலைனும் ஏதோ ஒரு ஆதங்கத்தில் குறைப்பட்டுக்கிட்டேன். தப்புதான். என்னதான் கூடப் பிறந்த அண்ணனாயிருந்தாலும் புகுந்த வீட்டாரைப் பத்தி பிறந்த
வீட்டில் விட்டுக் கொடுத்து பேசியிருக்கக் கூடாதுதான்.”
“இதுதான் எனக்கு தெரியுமே. இப்ப இவன் அங்கே போக மாட்டேன்னு சொல்றதுக்கும் அந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்?நான் என்ன செய்ய முடியும் சொல்லு. அவர் என் கூடப் பிறந்தவர்.
பெரியம்மாவை பறி கொடுத்துட்டு அனாதையாய் நிற்கச் சொல்ல, நான் எப்படி அவரை அம்போனு விட்டுட்டு வர முடியும் சொல்லு. அதை உன் அண்ணங்கிட்ட சொல்லி நீ குறைப் பட்டு கிட்டதிலும் தப்பில்லை. இப்ப அதுக்கு என்ன. அதுக்கும். இவன் உன் அண்ணன் வீட்டுக்கு வெகேஷனுக்கு போக மாட்டேன்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?உன் அண்ணன் என்ன பண்ணியிருக்கணும்? குடும்பம்னா இப்படிதான் இருக்கும். நீ விட்டுக்கொடுத்து, அனுசரிச்சுதான் போகணும்னு சொல்லியிருக்கணும்” என்ற போது நான் குறுக்கிட்டு சொன்னேன் “அப்படி
ஆறுதல் சொல்லாட்டி கூட தப்பில்லைப்பா. அவர் கம்முனு இருந்திருக்கலாம். ஆனா, மாமா, அவ்வளவு வயசானவர் என்ன பேசினார் தெரியுமா? அப்படி பேசலாமாப்பா?” என்றேன்.
என்னை மடக்கி அப்பா சொன்னார் “தப்புதாண்டா…. உன் மாமா அப்படி பெரியப்பாவை பேசி இருக்கக்கூடாதுதான். அதுவும் உடல் ஊனத்தை குறை சொல்லக்கூடாது. இது மட்டும் பொயப்பா
காதுகளில் விழுந்திருந்தா, எப்படி வேதனை அடைஞ்சிருப்பார். பெரியப்பாவுக்கு உடம்பு பூரா வெள்ளை, வெள்ளையா திட்டுத் திட்டா இருக்குதான். இது ஒண்ணும் வியாதி இல்லைனு டாக்டர்கள் சொல்றாங்களே.இதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு, இப்படிப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லாம, அவங்க மனசை
நோகடிக்கிறது என்ன நியாயம்?
ஏன்தான் இந்த சீக்கு பிடிச்ச ஆளை உன் புருஷன் வீட்டோட கொண்டு வந்து வச்சுருக்கிறார்னு.. எப்படிமா மாமாவுக்கு இப்படி கேட்கத் தோணிச்சு. அதுவும்
ஏளனப் பார்வையோட . அப்பக் கூட நான் மாமா கிட்ட ஏன் மாமா இப்படி ஒருத்தர் உடல் ஊனத்தைப் பத்தி பேசறீங்கனு கேட்டப்ப,
‘‘அட போடா.. இதெல்லாம் தொத்து வியாதி. இப்படி வியாதி வந்ததும் அவங்ககிட்ட யாரும் நெருங்கி பழகக் கூடாது. உங்க அப்பனுக்கு அறிவே இல்லை.. அண்ணன் பாசம் பொத்துக்கிட்டு வருதுனு சொன்னப்ப கூட
நான் “மாமா ஒரு அன்னை தெரசா வெளி நாட்டிலிருந்து இங்கே வந்து ரொம்ப மோசமான நிலையில் இருந்த தொழு நோயாளிகளுக்கு சேவை பண்ணலையா? அவங்களுக்கு என்ன அந்த வியாதியா ஒட்டிக்கிச்சுனு கேட்டேன்.
“போடா, அதிகப்பிரசங்கித் தனமா எதுவும் பேசாதே பெரியவங்க கிட்டனு சொன்னார். அப்பவே எனக்கு மாமா மேல இருந்த பாசம் அடியோடு விட்டுப் போச்சு.
இருந்தாலும் மாமா கிட்ட ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டேன், “ஏன் மாமா நாளைக்கே, உங்களுக்கோ, மாமிக்கோ இப்படி ஒரு வியாதி வந்தா என்ன செய்வீங்கனு.
அவருக்கு கோபம் என் மேல.
வயசுக்கு மீறி பேசறான் உன் பிள்ளையாண்டான். கண்டிச்சு வைனு அம்மா கிட்ட சொன்னார். நான் உள்ளதைத்தானே சொன்னேன். இதில என் மேல ஆத்திரப்பட என்ன இருக்குனு தெரியலை.
அதான் இங்கே வந்ததும் அப்பா உங்ககிட்ட மாமா பேசினதை சொன்னேன். நீங்களும் அதை பெரிசா எடுத்துக்கலை.
அட போடா! உன் மாமா அப்படி பேசியிருக்க கூடாதுதான்.
இருந்தாலும் இப்ப நான் வரிஞ்சு கட்டிகிட்டு உன் மாமன்காரன் கிட்ட சண்டைக்கு போனா இரு பக்க உறவும் விட்டுப் போகும்.அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். விடு.. இதை பெரிசா எடுத்துக்காதேனு நீங்க பெருந்தன்மையாய் விட்டுட்டாலும் அம்மா இதைப்போய் மாமா கிட்ட கேட்டுட்டாங்க. நான் இப்ப அங்கே அவங்க வீட்டுக்கு போனாலும் மாமா எங்கிட்ட சகஜமாய்
இருக்க மாட்டார். என் மேல ஒரு விரோத மனப்பான்மை அவர் மனசில உருவாகியிருக்கலாம். அதான் நான் அங்கே போக விரும்பலை. .
அப்போது, அங்கே சற்றும் எதிர்பாராமல் வந்த மாமா, எங்கள் பேச்சு கேட்டு வாயிலிலேயே நின்றிருப்பார் போலும் .
உள்ளே வந்து “டேய் கண்ணா.. உனக்கிருக்கும் மன முதிர்ச்சி ஏனோ
எனக்கில்லாமப்போச்சுடா. என்னை மன்னிச்சுடுடா. நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாதுதான். உன் அப்பாகிட்ட வந்து மன்னிப்பு கேட்கவும் பயம். அவர் இனி என் முகத்திலேயே
விழிக்காதேனு சொல்லிட்டா என்ன பண்றதுனு. இத்தனை நாட்களும் இந்த நிகழ்வே என் மனசில் தீராத வேதனையை கொடுத்துக் கிட்டிருந்தது..இனியும் இதை வளர விடக்கூடாதுனு
எண்ணிதான் இங்கே வந்தேன்.. உன் அப்பா கிட்ட, குறிப்பா உன் பெரியப்பா கிட்ட மன்னிப்பு கேட்க” என்ற மாமாவிடம் “நானும் தப்பு பண்ணிட்டேன் மாமா. நீங்க அன்னைக்கு ஏதொவொரு
சந்தர்பத்தில் பெரியப்பா பத்தி பேசினதை பெரிசா எடுத்துக்கிட்டு நானும் அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருக்க கூடாதுதான்.
அப்பா என்னவோ பெருந்தன்மையாய்” சரி விடுடா.. குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லைனு” சொல்லி எனக்கு உணர வச்சார்.
நீங்க அன்னைக்கு பெரியப்பா பத்தி பேசினது தப்புனா., நான் அப்பாகிட்ட போட்டுக் கொடுத்ததும் தப்புதான்.
என்னை மன்னிச்சுருங்க மாமா, அப்பா, அம்மா” என்ற என்னை
வாரியணைத்து அனைவருமே உச்சி முகர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *