சென்னை, செப் 23
“இதுவரைக்கும் நான் 600க்கும் மேற்பட்ட அனாதைப் பிணங்களுக்கு ஈமக்கிரியை செய்து இருக்கிறேன்” என்று பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் உருக்கமாக கூறினார்.
“அனாதைகளுக்கு உதவி செய்வதும், அனாதைப் பிணங்களை இடங்களை எடுத்து, அவர்களுக்கு ஈமக்கிரியை செய்வதும் அசுவமேத யாவும் செய்தால் வரக்கூடிய பலன் கிடைக்கும் என்று காஞ்சி மகாப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொல்லி இருக்கிறார். அதனுடைய தாக்கம் தான் நான் அனாதைப் பிணங்களுக்கு ஈமக்கரியை செய்து வருகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
எஸ்.வி. சேகருடன் ‘‘பேனாக்கள் பேரவை’’ மூலம் எழுத்தாளர்களின் சந்திப்பு சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கிளப்பில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் பேசுகையில், தனது நாடகம் – சின்னத்திரை – சினிமா மற்றும் அரசியல் – பொது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
‘‘என்னுடைய தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன், இதே போல அனாதைப் பிணங்களுக்கு ஈமக் கிரியை செய்திருக்கிறார். அதே வழியில் நானும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என்னால் நேரடியாகப் போக முடியாத சூழ்நிலைகளில் ஈமக்ரியைக்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறேன்’’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘‘தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் உரிமைக் கோரப்படாமல் பல்வேறு மருத்துவமனைகளில் கிடக்கும் பிணங்கள் அனாதை என்று அறிவிக்கப்பட்ட பிறகு அவற்றை எடுத்து வந்து ஈமக் கிரியைகள் நடத்தப்படுகிறது’’ என்றார் அவர்.
‘‘மகாப் பெரியவரின் வார்த்தைகளில் நம்பிக்கை உடையவர்கள் நம்பிக்கையோடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள், அனாதைப் பிணங்களை எடுத்து ஈமக் கிரியைகள் செய்வதன் மூலம், மருத்துவமனைகளில் அடுத்தடுத்து இறப்பவர்களுக்கு அந்தப் பிணங்களை வைக்க பிரேத அறைகளில் இடமும் கிடைக்கிறது’’ என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டணம் இல்லாமல்..
சூர்யநாராயண சாஸ்திரி
‘‘சென்னை மேற்கு மாம்பலத்தில் என்னுடைய நண்பர் சூரிய நாராயண சாஸ்திரி, ஈமக்ரியைகள் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கும் மிகவும் வறுமை நிலை குடும்பத்துக்கு இலவசமாகவே அதை செய்து முடிக்கிறார்’’ என்ற ஒரு தகவலையும் எஸ் வி சேகர் வெளியிட்டார்.
எஸ்.வி. சேகரின் முதல் மேடை அனுபவம் எழுத்தாளர் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’. இந்த நாடகத்திற்காக (ஆர் ஆர் சபாவில்) அப்பா எஸ்.வி. வெங்கட்ராமன் டிக்கெட் வாங்கி வரச் சொல்லி அனுப்ப, நாடகம் பார்க்கச் சென்ற அவரை புடவை அணிவித்து பெண் வேடம் போட வைத்தார்களாம். இதுதான் தன்னுடைய முதல் நாடக மேடை அனுபவம் என்று நகைச்சுவையுடன் கூறினார். (ஆனால் அதற்கு முன்பே அவரின் 10வது வயதில் ‘ரேடியோ அண்ணா’ கூத்தபிரான் தயாரிப்பில் ரேடியோ நாடகத்திலும் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சட்டைப் பையில்
தேசீயக்கொடி
எஸ். வி. சேகர் எப்பொழுதும் தன் நாட்டு பற்றினை உணர வைக்கும் வகையில் தேசியக் கொடியை நெஞ்சில் சுமந்திருப்பார் ; மேல் சட்டைப் பையில் வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கே. பாலச்சந்தரின் உதவியாளர் கே.பி. மோகன், எஸ்.வி. சேகருக்கு திருவள்ளுவர் படம் ஒன்றை பரிசாக அளித்தார். அதை வரைந்தது ஓவியர் ஸ்ரீதர் என்றும், அதில் திருவள்ளுவராக இருப்பது இயக்குனர் கே. பாலசந்தர் என்றும் கூறி ஆச்சரியப்பட வைத்தார் மோகன்.
நிகழ்ச்சியை எழுத்தாளர்கள் என்.சி. மோகன்தாஸ், தயாளன் வெங்கடாசலம், நூருல்லா ஒருங்கிணைத்து நடத்தினார்கள். லேனா தமிழ்வாணன், விகடன் ரவி பிரகாஷ், பாக்கெட் நாவல் அசோகன், உதயம் ராம், டாக்டர் பாஸ்கர் ஜெயராமன், எஸ்.எல். நாணு,பி.வி ராஜ்குமார், மலர்வனம் ராம்கி, குவிகம் ஆர்கே, சுஸ்ரீ, ரவிநவீனன், நவரஞ்சனி ஸ்ரீதர், ஆர்சி நடராஜன், காவேரி மைந்தன், சின்னக் கண்ணன், பொற்கொடி கலந்து கொண்டனர்.
மடிப்பாக்கம் வெங்கட், டி என் ராதாகிருஷ்ணன், விஜிஆர் கிருஷ்ணன், அகிலா ஜுவாலா அனைவரையும் வரவேற்றனர்.