அந்த விபத்து நடந்து ஏறக்குறைய ஒரு வாரமாகி விட்டது. சந்துருவின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
சந்துருவுக்கு வயது முப்பத்தியிரண்டு ஆகிறது. அவனுக்கு அவன் தந்தை கற்றுத் தந்த தொழில் வாகனம் ஓட்டுநர் தொழில் மட்டும்தான்.
அதையேதான் அவன் செய்து வந்தான்.
தந்தை ராஜதுரை அரசு பேருந்து ஓட்டுபவர்.
அந்தக் காலத்தில் டிராம் வண்டி என்பது செயலில் இருந்தது. பின்னாளில் அரசு பஸ்கள் செயலுக்கு வந்து மக்களிடம் பிரபலமாகி விட்டது.
சந்துருவின் தந்தை ராஜதுரை அரசு பேருந்து ஓட்டிய காலகட்டத்தில் போக்குவரத்து செயல்பாடுகள் மிகவும் குறைவு.
அதிலும் ராஜதுரை மிகவும் பொறுமைசாலி. வாகனத்தை வேகமாக ஓட்டமாட்டார். வாழ்க்கையில் ஒரு முறை கூட விபத்து ஏற்படுத்தியதில்லை. அவர் பணிக்காலத்தில் எந்தவித தவறும் நடந்ததில்லை. எனவே நிர்வாகத்தினரால் அவர் பலமுறை பாராட்டப்பட்டுள்ளார்.
அவர் பணி ஓய்வுக்குப்பின் தனியார் கார்கள் ஓட்டுபவராக பணிகள் செய்து வந்தார்.
மருத்துவர் ஒருவரிடம் கார் டிரைவராக ராஜதுரை பணிபுரிந்தபோது தனது மகன் சந்துருவுக்கு தனது ஓட்டுநர் தொழிலை கற்றுத் தந்தார் ராஜதுரை.
அதன்பின் சந்துருவும் ஒரு வாகன ஓட்டுனராக உருவானான்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒட்டுநர் வேலையும் சந்துருவுக்கு கிடைத்தது.
வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்ட வேண்டும். நீண்ட தூரம் உடல் நலம் பாதிக்கப்பட்டவரை கொண்டு செல்லவும் அல்லது நீண்ட தூரத்திலிருந்து உயிருக்குப் போராடுபவரை அழைத்து வர வேண்டும்.
சில சமயங்களில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்படும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் அல்லது விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து போகும் வகையில் அவரது உடலை இல்லத்திற்கு அல்லது அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு வரவேண்டும்.
அதுபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அவன் பணி புரிந்த சிம்மராஜாங்கம் தனியார் மருத்துவமனையில் இதய நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து போய் விட்டார்.
அவர் சொந்த ஊர் வாலாஜாபாத் கடந்து வேலூர் ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் இருந்தது.
இறந்து போன குப்புசாமி என்பவரின் உடலை வேலூர் அருகிலுள்ள கிராமத்தில் ஒப்படைத்து விட்டு, அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, துக்கத்தில் பங்கேற்ற சிலரை அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் சந்துரு.
அப்போதுதான் எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்தது.
சந்துரு ஓட்டிய ஆம்புலன்ஸ் வாகனம் ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக ஒரு காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்தது.
முன்னால் சரக்கு ஏற்றிய லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
சந்துரு பலமுறை அதனை முந்திச் செல்ல ஒலியை எழுப்பினான். ஆனால் அந்த சரக்கு லாரி அசைந்து கொடுப்பதாக இல்லை. ஒதுங்கவுமில்லை.
இவனது ஒலியெழுப்பும் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது.
இதனால் அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் சலித்துக் கொண்டார்கள்.
சிலர் கோபமாக பேசினார்கள்.
சந்துருவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தனியார் மருத்துவமனைக்கு வாகனத்தை எடுத்துச் சென்று சேர்ப்பிக்க வேண்டும்.
அதன் பொருட்டு ஒலியை மேலும் மேலும் அதிகப்படுத்தி எழுப்பினான். பலனில்லை.
ஒற்றையடிப்பாதை. அதுவும் வளைவான குறுகலான பாதை. எதிர்வரும் வாகனங்கள் பாதையின் வழிமுறையை அறிந்து லாவகமாக கடந்து சென்றன. பெரும்பாலான வகையில் எதிர் திசையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை.
முடிந்தவரை சந்துரு ஒலியை எழுப்பிப் பார்த்து விட்டு, எந்த பயனுமில்லாத நிலையில், பக்கத்திலிருந்த வண்டியிலிருந்த துக்கத்தில் பங்கேற்ற சிலர் எரிச்சலோடு முந்திச் செல்லும்படி சந்துருவிடம் நச்சரித்துப் பேச,
அதனால் வலதுபுறம் ஆம்புலன்ஸை முன்னெடுத்துச்செல்ல முயற்சித்த போது எதிர்திசையில் கூடுமானவரை குறுகலான பாதை, எங்கும் வெளிச்சமின்மை, இருள் போர்வை விரிப்பு என பாதை மாறுவதில் சிக்கல் மண்டிக்கிடந்தது.
ஆயினும் விடாப்பிடியாக ஒரு கட்டத்தில், ஆம்புலன்ஸை வலதுபுற பாதையாக எடுத்து சரக்கு லாரியை பாதி கடக்கும்போது, எதிர்ப்புற வளைந்த பாதையில், மெல்லிய ஒலியை எழுப்பியபடி சரக்கு லாரிக்காரனுக்கு விவரம் தெரிவித்தபடி ஓர் வாகனம் அதுவும் பெரிய வாகனம் வருவதை உணர முடிந்தது.
இவன் ஆம்புலன்ஸிலிருந்த யாருக்குமே விவரம் தெரியாத நிலையில் அச்சத்தை உணர்ந்த நிலையில் சிலர் கூச்சல் எழுப்பி, இவனும் செய்வதறியாமல், மேலும் வலப்புறமாக வளைந்து தாழ்வான வயல்வெளியில் ஆம்புலன்ஸை திசை மாற்றம் செய்யலாமா? என யோசித்த வேளையில் மேலும் அதிக வேகத்துடன் அந்த பெரிய வாகனம் வருவதை அவனால் உணர முடிந்தது.
அப்போது ஒரு மிகப் பெரிய பேருந்து வந்து கொண்டிருப்பதையும் அது அசுரத்தனமான வேகத்தில் இயக்கப்படும் வெளியூர் அரசுப் பேருந்து என்பதையும் உணரும் அனுபவ ரீதியாக அதன் ஹாரன் ஓசையின் மூலம் அறிய முடிந்தது.
சந்துரு அந்த இமாலய வேக பெருத்த வாகனமான பேருந்து நெருங்கும் அபாயத்தை உணர்ந்து, ஸ்டீயரிங்கை வலப்புறம் இழுத்து பள்ளமான வயல்காட்டுக்குள் நுழைய முயலும்போது மிகப் பெரிய புளியமரமொன்று நின்று கொண்டிருப்பதை அறிந்து வேறு வழியின்றி அந்தப் புளிய மரத்தின் மீது ஆம்புலன்ஸை மோதுவதைத் தவிர வேறு வழியேதுமில்லாத நிலையில் புளிய மரத்தை தொடும் வேகத்தில் அந்தப் பயங்கர சப்தத்துடன்தான் அந்த மோதலும் பயங்கரமும் நிகழ்ந்தது.
ஆம், அந்த மிகப் பெரிய அரசுப் பேருந்து மின்னலை விட அதிகமான அசுர வேகத்தில் வந்து ஆம்புலன்ஸ் மீது மோதியதையடுத்து இருதரப்பு வாகனத்திலிருந்தும் அலறல் ஓலங்கள்.. மரண ஓலங்கள் விண்ணைத் தொட்டன. அதிர வைத்தன.
எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விட்டது.
அரசுப் பேருந்து ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியதில் சிலர் அதே இடத்தில் பிணமானார்கள். சிலர் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் சுக்குசுக்கலாக நொறுங்கிப் போனது.
விபத்தில் சிக்கியவர்களின் ரத்தம் வாகனத்திலிருந்து சாலையில் ஆறுபோல் ஓடிக் கொண்டிருந்தது.
சந்துருவின் இதயப் பகுதியில் ஸ்டீயரிங் பெயர்ந்து வந்து குத்தியதில் அவன் இதயம் செயலிழப்புக்குப் போய் கொண்டிருந்தது.
அரசுப் பேருந்துகளிலிருந்த சிலரின் கால்களில் காயங்கள் ஏற்பட்டும். மிக லேசான காயங்களுடனும் கூச்சலிட்டார்கள்.
காட்டுப் பகுதிக்குள் நடந்த சம்பவம் ஊருக்குள் சென்றடைந்து உயிர் காக்கும் மற்ற சயரன் ஒலி ஆம்புலன்ஸ்கள் வந்து சேர இரண்டு மணி நேரமாகி விட்டது.
அதற்குள் சந்துரு ஓட்டி வந்த ஆம்புலன்ஸிலிருந்த ஆறுபேரில் ஐந்துபேர் உயிரிழந்து சடலமாகியிருந்தார்கள்.
அபாய கட்டத்திலிருந்த சந்துருவும் கால் துண்டிக்கப்பட்டு உயிர் ஊசலாடிய பெண் தந்த மரண வாக்குமூலத்தில் அந்தப் பேருந்து டிரைவரின் கொடூர மனப்பான்மையும் சிறிது சிரமம் மேற்கொண்டு பிரேக் போட்டு நிறுத்தாத கொலைவெறி வேகத்தை புகாராக தெரிவித்துவிட்டு அந்தப் பெண் உயிர்த்துறந்தாள்.
சந்துரு தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டாத நிலையில் இருந்தான்.
கோமா நிலையில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட நிலையில் அவன் உயிர் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
தலைமை மருத்துவர் தலைமையில் மருத்துவக் குழுவினர் அவன் உயிர் மீட்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வரவேற்பறையில் அமர்ந்திருந்த சந்துருவின் தந்தை ராஜதுரை அங்கிருந்த ஒரு மருத்துவரிடம் கேட்டார்.
“அய்யா என் மகனோட நிலைமை எப்படியிருக்கு?
டாக்டர் பிரபு உதட்டை பிதுக்கினார்.
“ஒண்ணுமே சொல்றதுகில்லை.. ஒரு தகவல் சொல்றேன்..உங்க மனசை நீங்க கொஞ்சம் தேற்றிக்கணும் அய்யா.“
“சொ.. சொல்லுங்க டாக்டர்.“ ராஜதுரையின் நா தழுதழுத்தது.
“நான் சீப் டாக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்“ என்றவர், உள்ளே இன்டன்ஸிவ் கேர் யூனிட் (அவசர சிகிச்சைப் பிரிவு)டுக்குள் சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்பினார்.
“அய்யா உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கு“
“சொல்லுங்க டாக்டரய்யா“
“உங்க மகன் இனிமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லை“
“டாக்டரய்யா நிஜமாகவாய்யா“ அவர் குரல் கம்மியது.
“ஆமாம் இனி நூறு சதவீதம் உங்க மகன் சந்துருவை உயிர் பிழைக்க வைக்க முடியாது“ ஆனா அதுலயும் ஒரு சின்ன நல்ல தகவலும் உண்டு. நீங்க அதுக்கு சம்மதிப்பீங்களா?“
“சொல்லுங்க டாக்டரய்யா, நீங்க எது சொன்னாலும் நான் செய்யறேன்.“
“உங்க மகன் சந்துரு கல்லூரி படிப்பை முடிச்சிட்டு வேலை இல்லாம இருந்திருக்கார். படிக்கும்போது கவின்னு ஒரு பெண்ணை காதலிச்சிருக்கார். அந்தப் பெண்ணும் உங்க மகனை காதலிச்சிருக்கா.. அந்த பெண்ணோட தந்தை வெளியூர்ல உள்ள ஒரு நீதிமன்றத்துல நீதிபதியாக இருப்பவர். அவருக்கு இந்தக் காதல் விவகாரத்துல சம்மதமில்லாம வெளியூருக்கு கொடைக்கானலுக்கு உங்க மகன் காதலிச்ச பெண்ணை அனுப்பி மேல் படிப்பு படிப்பதற்காக விடுதியில சேர்த்து தங்க வைச்சு, வெளியே எங்கும் போக விடாம அடைச்சு வைச்சுட்டார் ஒரு கைதியை விசாரனை நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரிமாண்ட் பண்ற மாதிரி.
சூழ்நிலை கைதியான அந்தப் பெண்ணுக்கு மன நிலை பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சி பண்றா..“
கேட்டுக் கொண்டிருந்த சந்துருவின் தந்தை ராஜதுரை அதிர்ந்துப் போயிருந்தார்.
டாக்டர் பிரபு தொடர்ந்தார்.
தற்கொலை முயற்சியாக அங்கிருந்த அருவியில உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் குதிச்சு தற்கொலை முயற்சி செய்தபோது சக மாணவ மாணவிகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவ சிகிச்சை செய்து உயிர் பிழைச்ச போதும் அந்தப் பெண்ணோட இதயமும் கண் பார்வையும் பழுதடைந்து போச்சு..
கண் பார்வையையும் இழந்துட்டா, இதயமும் பழுதடைந்து போச்சு.. ஆனாலும் இதே நிலையில் அந்த கவிங்கிற பெண் உயிர் வாழ்ந்துகிட்டிருக்கா..“
இந்த செய்திகளை உங்க மகன் சந்துரு அவரோட நவீன செல்பேசி மெமரி கோடுன்னு ஒரு சீக்ரெட் பகுதியிலயும் தனது ஸ்பீச் ரிக்கார்டர்லயும் பெண் முகவரி, செல்பேசி விவரம் பதிவு செய்து வைத்திருந்ததை தலைமை மருத்துவரும் நாங்களும் கண்டு பிடிச்சிட்டு.. போலீஸ் உதவியோடு அந்தப் பெண்ணோட அப்பாவான நீதிபதியை தொடர்பு கொண்டுபேசினபோது அவர் அனைத்துமே உண்மைதான்னு ஒத்துக்கிட்டார்.
இப்ப உங்க மகன் விபத்துல உயிரிழப்பதை தெரிவித்தபோது வருத்தப்பட்ட அவர் உங்க மகன் சந்துருவோட இரண்டு கண்கள், இதயத்தை அவர் மகள் சந்துரு காதலிச்ச கவிக்கு மாற்று செயலுருப்புகளாக பொருத்தவும் விருப்பப்படறார்.
இதற்கு பிரதிபலனாக உங்களுக்கு வாழ்வாதாரமாக சில லட்சங்களும் வாழ்க்கைக்கு உதவவும் சம்மதம் தெரிவிக்கிறார். இப்ப நீங்க உங்க பதிலை தெரிவிக்கலாம் அய்யா. “
டாக்டர் பிரபு கூற, கண்களில் கண்ணீர் பொங்க ராஜதுரை தலையசைத்து மௌனமாய் தன் சம்மதத்தை கூற, செல்பேசியை உயிர்ப்பித்து மருத்துவர் பிரபு, ராஜதுரையிடம் அவர் மகன் காதலித்த பெண்ணின் தந்தை நீதிபதி பகவான்சிங்கிடம் பேச வைத்தார்.
“என் மகனால உங்க மகள் வாழறதை விரும்புறேன் நீதிஅரசர் அய்யா“
“இனிமேல் என்னை நீதிபதி, நீதிஅரசர்ன்னு எல்லாம் சொல்லாதீங்க ராஜதுரை அய்யா, இனி நான் உங்க சம்மந்தி“மறுதரப்பில் நீதிபதி குரல் தழுதழுக்க பேசினார்.
மகனை பரிகொடுத்த ராஜதுரையின் கண்களில் கண்ணீர்த்துளிகள் அருவி நீராய் பெருகெடுத்துக் கொண்டிருந்தது.