செய்திகள் நாடும் நடப்பும்

இதயம் தொட்ட டாக்டர் கே.எம்.செரியன்

Makkal Kural Official

டாக்டர் மது சங்கர்


உலகப் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கே.எம். செரியன், 1960–ம் ஆண்டு மார்ச் 8 ந்தேதி கேரளாவில் பிறந்து, கடந்த ஜனவரி 25 அன்று பெங்களூரில் காலமானார். அவருடைய மருத்துவ நிபுணத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத் திறன் காரணமாக நன்கு அறியப்பட்டவர். 1992–ம் ஆண்டு ஜனவரியில் விஜயா மருத்துவமனையில் நான் அவரிடம் சேர்ந்தேன்.

1995 டிசம்பரில், சிறிய பெருந்தமனி மூலத்தைப் பற்றிய எங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை லண்டன் ராயல் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நான்தான் மாநாட்டில் கட்டுரையை சமர்ப்பித்தேன். என்னுடைய டிஎன்பி – இதய அறுவை சிகிச்சை முடித்து, சில மாதங்களே ஆகியிருந்த போதிலும், எனது பயணத்திற்கு நிதியுதவி செய்து கட்டுரையை சமர்ப்பிக்க ஊக்குவித்தார்.

அதேபோல, 1999–ம் ஆண்டில் இந்தியாவில் முதல் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டோம். அதுகுறித்து 2000–ம் ஆண்டில், அந்த ஆய்வுக் கட்டுரையை மலேசியாவில் என்னை சமர்ப்பிக்க வைத்தார்.

ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடுள்ள அவர், அதனை வெளியிடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன் அனைவரையும் ஊக்குவித்தார். இதயக் குழாய், தமனிகள் பாதிப்பு குறித்து அக்கறை செலுத்திய அவர், அடைப்புகளை நீக்கும் முறையான ‘எண்டார்டெரெக்டோமி’ மற்றும் ‘பைபாஸ்’ சிகிச்சைகளை சிறப்பாக செய்தார். இவை அமெரிக்காவின் ஜர்னல் ஆஃப் கார்டியாக் சர்ஜரி இதழில் வெளியிடப்பட்டதுடன், இந்தியாவிலிருந்து பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அதுவும் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2008–ம் ஆண்டில், ஒரு மருத்துவ தம்பதியின் மகனான ஹித்தேந்திரன் என்பவரால் தானம் செய்யப்பட்ட உறுப்புடன் 8 வயது சிறுமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மருத்துவ ரீதியாக பரவலாக பேசப்பட்டு கவனத்தை ஈர்த்ததுடன் பல செய்தித்தாள்களில் வெளியானது. இதன்மூலம் பொது மக்களிடையே உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுடன், தமிழ்நாடு அரசாங்கத்தால் டிரான்ஸ்டான் (Transtan) என்ற அமைப்பு உருவாகவும் வழிவகுத்தது.

குழந்தைகள் இதய அறுவை சிகிச்சையில் அவரது முன்னோடி பணிகளுக்காக 1992–ம் ஆண்டில் இந்திய அரசு அவரை கவுரவிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது வழங்கியது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள புனித வின்சென்ட் மருத்துவமனையிலும், அமெரிக்காவின் அலபாமாவிலுள்ள யூஏபி மருத்துவமனையிலும் பயிற்சி பெற்ற அவர், மருத்துவ ரீதியாக பரவலாக பயணம் செய்துள்ள அவரது மருத்துவப் பணி, உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய அவர், இந்தியாவில் முதல்முதலாக இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

அவர் ‘மேக் இன் இந்தியா’வில் மிகவும் ஆர்வம் காட்டினார் என்பதுடன் முதல் இடது வெண்ட்ரிகுலர் உதவி சாதனத்தை உருவாக்க மாஸ்கோவுக்கு பயணம் செய்தார். அதற்காக, மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒரு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார்.

தற்காலத்தின் சிறந்த மனிதரான அவர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனை, பருமளா கார்டியாக் யூனிட், செங்கன்னூர் கேஎம்சி மருத்துவமனை, புதுச்சேரி பள்ளி மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள மெடிவில்லியில் ஆராய்ச்சி பூங்கா போன்ற நிறுவனங்களை நிறுவி வளர்த்தெடுத்தார்.

நான் பல ஆண்டுகளாக அவரிடம் பணிபுரியும் பேறு பெற்றேன். என்னைப் போலவே இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 1000 இதயத் ‘தோராக்ஸிக்’ அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரால் பயனடைந்துள்ளனர்.

அவர் தனது ஆராய்ச்சி பூங்காவில், விலங்கு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளதுடன் உலகில் தனித்துவமான 5000 இதய மாதிரிகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தையும் உருவாக்கி உலகத்துக்கு அளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *