சிறுகதை

இணை கோடுகள் |காசாங்காடு வீ காசிநாதன்

ஆனந்தியின் வீட்டிற்கு அவளிடம் கூறாமலே திருமண அழைப்பிதழை மதன் கொண்டு செல்கின்றான்.

வீடு பூட்டியிருந்தது . அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.

அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பு எழுதினான்:

மிகக்குறைந்த அளவில் 25 பேருக்குத்தான் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். அதில் நீயும் அடக்கம்.

மணமகள் ஆனந்தி .உனது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் அவள் பெயர் நந்து.

அழைப்பிதழ் கொடுத்து, அவசியம் வர வேண்டும் என அழைப்பது தான் நமது மரபு.

ஆனால் திருமணத்திற்கு வருவது “உனது விருப்பம்” – என்று எழுதினான்.

அழைப்பிதழை கடித பெட்டியில் போட்டுவிட்டு மதன் வீடு திரும்பினான்.

ஆனந்தி அன்று இரவு விருந்து நிகழ்ச்சி முடிந்து வாடகை உந்துவில் (டாக்சியில்) அவளது இருப்பிடம் சென்று கொண்டிருக்கும் போது….

பழைய நினைவில் மூழ்கினாள்……

தற்போது 26 வயதாகும் ஆனந்தி 3 ஆன்டுகளுக்கு முன்புதான் இங்கு பணியில் சேர்ந்தார். அவள் பணிபுரியும் நிறுவனத்தின் சீனப் புத்தாண்டின் விருந்து நிகழ்ச்சி அன்று மாலை ஆர்சர்ட் சாலையில் உள்ள “உட்கார்டன் ஹோட்டலில்” மிகச் சிறப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

“டிரிபிள் – இ” என்று தொழில் வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பயன்பாட்டாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

குளிர்பான வரவேற்பு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி களைகட்ட விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் முக்கிய விருந்து நடக்கும் இடத்தில் வந்து அமர்கின்றனர்.

அந்த ஹாலில் 30 மேசைகள் போடப்பட்டள்ளன. சிறிது நேரத்தில் விருந்தினர் மற்றும் பணியாளர்களால் நிரம்புகின்றது.

மங்கலான ஒளி வெள்ளத்தில் ஜோடிகளின் நடனம், மதுக் கோப்பைகள் நிரம்பி வழிந்தன. பலவகையான அசைவ உணவுகள் “சால்மன்டிக்கா” உட்பட சுற்றுகளாக பரிமாறப்படுகிறது.

நிகழ்ச்சி நெறியாளர் இடை இடையே அறிவிப்புகளைச் செய்த வண்ணம் இருக்கிறார்.

ஆடல், பாடல் என நிகழ்ச்சி தொடர்கின்றது. நிறுவனத்தின் இயக்குனர் திருவாட்டி இவானா லிம் வரவேற்புரை.

திறமையாகச் செயல் பட்டவர்களுக்கு விருதுக்கான சான்றிதழும் வெகுமதியையும் வழங்கினார்.

இவானா பணியாளர்கள் அனைவரையும் மனதாலும் வார்த்தைகளாலும் புகழ்ந்தார்.

சிங்கப்பூரின் கலாச்சாரத் தொடர்புடைய “சிங்கே” நடனம் அதற்கே உரிய ஆரவாரச் சத்தத்துடன் உள்ளே நுழைந்து காதுகளை பதம் பார்த்தது..சிறிது நேரம் அவர்களது சாகசங்களை ஆர்ப்பரித்து அரங்கேற்றினர்..

முடிவில் மேன்டரின் ஆரஞ்சுகளை உரித்து வீசி 5534 என்ற நான்கு இலக்க எண்ணை அறிவித்து அதே ஒலியிடன் வெளியேறியது.

இந்த நிகழ்ச்சிகளை ஆனந்தி முழுமையாக ரசிக்கவில்லை. கடைசி சுற்று அதிர்ஷ்ட குலுக்கலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது

*

பதின்ம வயதில் ஆனந்தியின் பள்ளிக்கல்வி ஒரு சில தோழிகளுடன் இனிதே முடிந்தது.

கல்லூரி சென்ற போதுதான் மதனுடன் பழக்க மேற்ப்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகினாள். மதன் சராசரியை விட நல்ல சிகப்புநிறம்.

எப்போதும் அவனைச் சுற்றி மகிழ்வுடனும் சிரிப்புடனும் ஒரு நண்பர்கள் வட்டம் சூழ்ந்திருக்கும். இதனால் மதனிடம் மயங்கினாள் ஆனந்தி.

நாளடைவில் அவன்மேல் அதீத காதலை வளர்த்து கொண்டு மதனைச் சுற்றி வந்தாள்.

அவனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் செல்வதில் அலாதி விருப்பம்.

கல்லூரி கலாச்சார விழாக்கள், இளையவர்களுக்கான போட்டிகளில் இவர்களது கல்லூரியின் சார்பாக இருவரும் கலந்து கொண்டு சில நேரங்களில் பரிசுகள் பெற்றுள்ளனர்

மதன் அவனது அம்மாவிடம் ஆனந்தியை விரும்புவதை சொல்லி வேலையில் சேர்ந்தபின் அடுத்த ஆண்டு அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்.

வீட்டில் யாரும் இல்லை. அப்பாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் இருப்பதாக மாமா தொலைபேசியில் பேசினார். உடனடியாக மருத்துவனை விரைந்தான். பெரிய டாக்டர், அப்பாவிற்கு மூளையில் பிரச்சனை என்றும் ஒருவகை “என்சிபாலோபதி`”(Encephalopathy) என்று ஆங்கிலத்தில் கூறினார். செவிலியரிடம் மாமா கேட்டதற்கு

மூளையின் இரத்த குழாயில் கசிவு, கொஞ்சம் சிக்கலான கேஸ், நாங்கள் முடிந்தவரை முயற்சிக்கின்றோம் எனப் பதில் கூறினார்.

மதனின் தந்தை கோமா நிலையில் மருத்துவமனையிலேயே இருக்கின்றார். டாக்டர்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பிழைப்பது ஆண்டவன் செயல் என கைவிரித்து விட்டனர். ஆனந்தி ஒரு சில முறை மருத்துவமனை வந்து மதனுக்கு ஆறுதல் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. இரண்டு மாதக்களுக்குப் பின் தந்தை இறந்து விட்டதாக மதனிடமிருந்து ஆனந்திக்கு தொலைபேசித் தகவல் வந்தது.

மாமா மகள் நந்து சில நாட்கள் அம்மாவுடன் தங்க நேர்ந்தது. அம்மாவை நந்து நன்கு கவனித்துக் கொண்டாள். அம்மாவிற்கு தேவையானவற்றை செய்து முடித்துவிட்டு பிறகு கல்லூரிக்குச் சென்று விடுவாள். மூன்று மாதம் எங்கள் வீட்டிலிருந்துதான் கல்லூரி சென்று வந்தாள். அம்மாவிற்கு நந்துவைப் பிடித்து விட்டது. மாமா மகளை திருமணம் செய்ய வேண்டும் ; அது அம்மாவிற்கு ஒரளவு ஆதரவாக இருக்கும் என்று உறவினர்களால் ஒருமனதாக முடிவானது. திருமணத்திற்கு ஒன்றும் அவசரமில்லை எனச் சொல்லி அப்போதைக்கு இதற்கு முற்றுப் புள்ளியிட்டான்.

அப்பா இறந்த அதிர்ச்சியினால் அம்மா உறைந்து போனார். அப்பாவின் நினைவுகளிலிருந்து அம்மா முழுவதும் மீளவில்லை. சில நேரங்களில் படுத்தே இருப்பார். நந்து ஒருத்தி தான் அம்மாவிற்கு ஆறுதல். தன்னுடன் ஒரு சகோதரி இருந்திருந்தால் அம்மாவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்திருக்கும். அவரது தேவையறிந்து நடந்து கொள்ளவும் இயலும். ஒரு தாய்க்கு மகனால் எல்லா பணிவிடைகளையும் செய்துவிட இயலாது என்பதை மதன் அறிந்து கொண்டான்.

அம்மாவா? காதலியா? இச்சூழலில் அம்மாவை விட மனமில்லை; மனதை கல்லாக்கினான்.

மதனின் திருமணம் அவன் மாமா மகளுடன் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *