முழு தகவல்

இணைய வழியில் முதன்முறையாக முனைவர் பட்ட ஆய்வு சமர்ப்பிப்பு

உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவன் வழிகாட்டுதலில்

இணைய வழியில் முதன்முறையாக முனைவர் பட்ட ஆய்வு சமர்ப்பிப்பு

சென்னை, ஆக. 23-

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் நெறியாளராக இருந்து வழிகாட்டிய, “தமிழ் இதழியல் வரலாற்றில் ஆனந்த போதினி” என்ற ஆய்வேட்டிற்கான வாய்மொழித்தேர்வு, முதன்முறையாக இணைய வழியில் நடத்தப்பட்டு முனைவர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு, ஆய்வாளர் இரா. ஆனந்த ஜோதி, முதன்முறையாக இணைய வழியில் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித் தேர்வில் பங்கேற்று, பட்டம் பெற்றுள்ளார். அதுகுறித்து மக்கள் குரல் நாளிதழிலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், 68 வது தமிழ்த்தாய் திருவிழா நிகழ்வுக்காக, அரிய பழந்தமிழ் நூல்களை தேடி, புதுப்பிக்கும் பணி நிமித்தமாக சென்றபோது, திருவண்ணாமலையில் மூடிக்கிடந்த ஒரு நூலகத்தில் இருந்து ‘ஆனந்த போதினி’ என்ற மாதஇதழை கண்டுள்ளார். அதனை படித்து பார்த்தபோது, பல்சுவை மாத இதழாக இருந்ததை அறிந்து, அதனை ஆய்வு செய்யச்சொல்லி வழிகாட்டினார்.

பகுத்ததும் தொகுத்ததும்

இதனையடுத்து, “தமிழ் இதழியல் வரலாற்றில் ஆனந்த போதினி” என்ற தலைப்பில் எனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன். புதுச்சேரி உள்பட பல இடங்களில் தேடி, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் இந்த இதழ்களின் தொகுப்பு இருப்பது அறிந்து, ஆய்வை தொடர்ந்தேன். அழிந்து போன, அல்லது சிதைந்து போகும் நிலையில் உள்ள இதழ்களின் சிறப்பை எடுத்துக்கொண்டு பகுத்தும் தொகுத்தும் கொடுப்பதுதானே ஆய்வும், ஆய்வாளரின் கடமையும். அந்த நிலையில், ஒரு தொகுதியை எடுத்து பிரித்தாலே நொறுங்கிப்போகும் நிலையில் இருந்த இதழ்தொகுப்பை, படம்பிடித்து, அதனை படிஎடுத்து படித்தே முனைவர் பட்ட ஆய்வை முடிக்க முடிந்தது.

எனது ஆய்வுக்கு 1915 முதல் 1940 வரையிலான 25 ஆண்டு இதழ்களையே எடுத்துக்கொண்டேன். இந்த இதழ்களின் தொகுப்பை படித்து ஆய்வுசெய்தபோதுதான், இதழ் ஆசிரியர் நாகவேடு முனுசாமி முதலியார், பத்திரிகை துறையில் எத்தனை வியாபார நுணுக்கமும் ஆர்வமும் கொண்டு நடத்தி இருக்கிறார் என்று அறிய முடிந்தது. அவர் தொடங்கிய பஞ்சாங்கம் என்ற இதழ், இன்றும் அவருடைய பேரன் மகேந்திரனால் நடத்தப்படுகிறது. அவர் மூலமும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

ஆய்வை முடித்த நிலையில் கொரோனா தொற்று பெருமளவில் பரவியதால், முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித்தேர்வை (viva) முடிக்க முடியவில்லை. இந்நிலையில், எனது பிஎச்டி ஆய்வு நெறியாளரும், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன், இணைய வழியில் ஆய்வை வழங்க ஆலோசனை கூறினார். அதன்படி, புறத்தேர்வாளர் பேராசிரியர் டேவிட் பிரபாகரன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் பங்கேற்க, எனது ஆய்வை இணைய வழியில் பங்கேற்று வாய்மொழியாக எடுத்துரைத்தேன்.

புறத்தேர்வாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்து, முதல் முறையாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு வாய்மொழித்தேர்வில் இணைய வழியில் பங்கேற்று முனைவர் பட்டம் பெற்றேன். இணையவழியில் நிகழ்ச்சி நடந்ததால், அமைச்சர், துணைவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது என, பெருமிதத்துடன் குறிப்பிட்டார் ஆனந்தஜோதி.

ஆனந்த போதினியின் சிறப்பு!

ஆனந்த போதினி இதழ் 1915 ஆம் ஆண்டு முதல், 1965 ஏப்ரல் மாதம் வரையில், சென்னை மண்ணடி தங்கசாலை பகுதியிலிருந்து 49 ஆண்டுகள் தொடர்ந்து பல்சுவை மாத இதழாக வெளி வந்துள்ளது. இதழின் ஆசிரியராக அரக்கோணத்தைச் சேர்ந்த நாகவேடு முனுசாமி முதலியார் இருந்துள்ளார். மாத இதழாக வெளிவந்த ஒவ்வாெரு இதழையும் பகுதி என்றும், 12 மாத இதழ்களை சேர்த்து ஆண்டுக்கொருமுறை தொகுதி என்றும் வெளியிட்டுள்ளார். முதல் இதழ் தொடங்கி 105 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

ஒரு அனா (6 பைசா ) விலையில் வெளிவந்த தொடங்கி 2 ஆண்டுகளிலேயே 10 ஆயிரம் படிகள் விற்பனையாகி உள்ளதாக குறிப்புகள் உள்ளது. பர்மா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த இதழ் விற்பனையாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்தும் கூட, இந்த இதழுக்கு சந்தா செலுத்தி உள்ளனர்.

புகழ்பெற்ற ஆளுமைகள்

இந்த இதழின் புகழுக்கு முக்கிய காரணிகளாக, பாரதிதாசன், டாக்டர் மு.வ., ‘ஜெமினி’ எஸ்.எஸ். வாசன், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார், பாஸ்கர தொண்டமான், கி.ஆ.பெ. விசுவநாதன் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த இதழ்களில் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், அன்னிய மொழி ஆதிக்க எதிர்ப்பு, தனித்தமிழின் அவசியம், சைவ, வைணவ சமயம் குறித்த கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், முத்துலட்சுமி ரெட்டியின் தேவதாசி முறை ஒழிப்பு, உடன் கட்டை ஏறும் வழக்கம் குறித்த கட்டுரைகளுடன், சிறுகதை, நாவல்கள், துப்பறியும் நாவல் உள்பட பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளது.

தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுப்பதன் மூலமே, தமிழை வளர்க்க முடியும் என, அப்போதே வலியுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புறநானூற்று செய்யுளை எடுத்துக்கூறி, அதுபோல் தமிழர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரைப்பட செய்திகள், நாட்டுப்புற இலக்கியங்கள் மட்டுமே அதில் இடம்பெறவில்லை.

தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *